வவுனியா இரட்டைக்கொலை - படுகொலைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது வீட்டுக்குள் புகுந்த 8 பேர், அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி, வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
அங்கு வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் தம்பதி உயிரிழந்தனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வு திணைக்களம்
இதேவேளை, வவுனியா பொலிஸார் மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 05 பேர் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 03 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவினரால் 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று பிற்பகல் வவுனியா வைரவ புளியங்குளம் குளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சில வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.