வவுனியாவில் கடும் மழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு (PHOTOS)
வவுனியாவில் 4 மணி நேரம் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 6.30 மணி வரை கடும் மழை பெய்ததுடன், தொடர்ந்தும் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
தாழ் நிலப்பகுதிகளில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மழை வீழ்ச்சி
இதேவேளை, வவுனியாவில் இன்று 57.02 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்கள அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று (10) காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 57.02 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, மாலை வேளையில் மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும் இக்காலப்பகுதியில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.



