ஒவ்வொரு நபருக்கும் இது கஷ்டமான காலகட்டம் : நிதி இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை
எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் இந்த காலகட்டம் மிகவும் கஷ்டமானது என்று சொல்ல வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
குறைந்துள்ள வருமானம்
நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற வற் வரி விழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒவ்வொருவரினதும் வருமானம் குறைந்து, செலவுகள் அதிகரித்துள்ளதால், சிரமங்கள் எழுந்துள்ளன. நாடு எதிர்நோக்கும் பிரச்சினையை புரிந்து கொண்டு அரசாங்கம் இதற்காக முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்கான வரித் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்யெடுத்து வருகிறது.
இதுவரை 20% ஆக இருந்த நேரடி வரி விகிதத்தை படிப்படியாக 30% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி வரியை மேலும் 40% ஆக மேலும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத்தில் மறைமுக வரிகளின் சதவீதத்தை குறைக்கும் திறன் அரசுக்கு உள்ளது. அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் பாவனையாளர்களுக்கு போலி பற்றுச்சீட்டுகளை வழங்கி, முறையற்ற விதத்தில் இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாகத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |