இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்

Mayuri
in பொருளாதாரம்Report this article
வைப்பாளரொருவர் வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வட்டி வருமானம் கிடைக்குமானால் அந்த வட்டி வருமானத்திற்கு வரி செலுத்துமாறு கேட்கப்படுவார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வற் வரிக்கு உட்படாத சேவையாக தான் நாங்கள் வங்கிச் சேவையை பார்க்கின்றோம். ஆனால் ஏற்கனவே எமக்கு தெரிந்த விடயம் தான் வங்கிகளிலே கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த கணக்கிலே அதிகளவு பணத்தை சேமிக்கின்ற போது அல்லது அந்த கணக்குகளுக்கு அதிகளவு பணம் வந்து சேருகின்ற போது அந்த பணம் எவ்வாறு வந்தது என்பது சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு கேட்கப்படுவார்கள்.
அது மட்டுமல்லாமல் அந்த வங்கிகளிலே வைப்பு செய்கின்ற பணத்தின் மூலமாக உழைக்கப்படுகின்ற வட்டி வருமானத்திலிருந்து வங்கி 5 வீதத்தை வெட்டி அரசாங்கத்தின் திரைசேரிக்கு அனுப்புமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருமானம் அந்த குறிப்பிட்ட நபருடைய வருடாந்த வருமானத்தோடு ஒப்பிடப்பட்டு அவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகிறார்கள்.
இதில் என்ன பிரச்சினை என்று சொன்னால் வைப்புக்களை வைத்து விட்டு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தால் அது வருமானம் அல்ல அவர்களுக்கு வருகின்ற ஒரு கொடுப்பனவாக இருக்கலாம், அல்லது சொத்துக்களை விற்று பெற்ற வருமானமாக இருக்கலாம் அது வைப்பு செய்யப்படுகின்ற போது இதிலிருந்து பெறப்படுகின்ற வட்டி அந்த ஒரு மாதத்திற்கு வட்டி ஒரு இலட்சம் ரூபாவை தாண்டுமாக இருந்தால் அவர்கள் அந்த வட்டி வருமானத்திற்கும் வரி செலுத்துமாறு கேட்கப்படுவார்கள். இந்த சிக்கல் இருக்கின்றதே தவிர கணக்குகளில் பணத்தை வைப்பு செய்கிற போதோ அல்லது எடுக்கின்ற போதோ வற் அறவிடப்படும் என்று சொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |