2024இல் இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி நிலை : மறுக்கும் ரணில் தரப்பு
ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
டொலர் கையிருப்பை அதிகரிப்பது சவால் மிக்கது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்கு வேலைத்திட்டம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரநிலையை அடைந்து வருகிறது. அரச வருமானம் மற்றும் டொலர் கையிருப்பை அதிகரிப்பது மிகவும் சவால்மிக்க விடயமாகும். என்றாலும் ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து வருவதை தரவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த வருடத்தில் கடந்த 28ஆம் திகதிவரை வரி வருமானமாக 2720 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதேபோன்று வரி அல்லாத வருமானமாக 253 பில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் பிரகாரம் மொத்த தேசிய வருமானம் 2973 பில்லியன் ரூபா இதுவரை பதிவாகி இருக்கிறது.
தேசிய வருமானத்தை அதிகரிக்க முயற்சி
இந்த வருடம் முடிவடைய இன்னும் இரு தினங்கள் இருக்கின்றன. அதனால் தேசிய வருமானம் மேலும் அதிகரிக்கும். மேலும் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை 3 மில்லியனாக அதிகரிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அந்த இலக்கை தற்போது எட்டக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த வருடத்தில் மொத்த தேசிய வருமானம் 2850 பில்லியனாக இருக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கி இருக்கும் இலக்காகும். தற்போது நாங்கள் அந்த இலக்கை தாண்டியுள்ளோம்.
அதேநேரம் 2023இல் மொத்த அரச செலவு 3063 பில்லியனாகும். அரசாங்கத்துக்கு வரி செலுத்தக்கூடியவர்களின் வரி பணத்தை முறையாக பெற்றுக்கொண்டால் எமது வருமானத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.
அத்துடன் ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் இந்த வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியாயின் எந்த அடிப்படையில் 40ஆயிரம் ரூபா அதிகரிக்கும் என தெரிவிக்க முடியும்?
அதேநேரம் வரி அதிகரிக்கப்படுவதால் பணவீக்கம் நூற்றுக்கு 2அல்லது 3வீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டிய நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை அறவிட நடவடிக்கை எடுத்தால் பணவீக்கத்தை குறைத்துக்காெள்ள முடியும்.
அதனால் அடுத்த வருடத்தில் இருந்து வரி செலுத்த வேண்டிய நிறுவனங்கள் தொடர்பாக கண்காணிக்க முறையான வேலைத்திட்டம் அமைத்திருக்கிறோம் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |