கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளரிற்கு இடமாற்றம்
கல்முனை மேலதிக மாவட்ட பதிவாளர் பைறுஸ் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கல்முனை காணிப்பதிவகத்தில் கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி வந்த அட்டாளைச்சேனை பன்மூலை பகுதியை சேர்ந்த பைறுஸ் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு கடந்த 01-11-2023ம் திகதி முதல் கிழக்கு மாகாண உதவி பதிவாளர் நாயகத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் 5 வருடங்களைக் கடந்தும் 8 வருடங்களுக்கும் அதிகமாக எவ்விதமான இடமாற்றமும் இல்லாது கல்முனை காணிப் பதிவகத்தில் தொடர்ச்சியாக அவர் கடமையாற்றுவது என்பது அரசாங்க சுற்று நிருபத்திற்கு விரோதமானதாகும்.
மேலும், அரசாங்க தாபனக் கோவை சட்டத்திற்கு முரணாகவும் உள்ளதனால் அவரை கல்முனை காணிப்பதிவகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி,பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் பதிவாளர் நாயகம் ஆகியோருக்கு ஏற்கனவே பல கடிதங்கள் அனுப்பப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய காணிப்பதிவாளர் நியமனம்
இதேவேளை கல்முனை காணிப்பதிவாளர் தொடர் வைத்திய விடுமுறையில் சென்றுள்ளதனால் தற்போது கல்முனை காணிப் பதிவகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளராக புதிதாக ஒருவரை நியமிப்பதற்கான மேலதிக ஒழுங்குகளை பத்தரமுல்லை பதிவாளர் நாயகம் அலுவலகம் மேற்கொண்டு வருவதாக அறியப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மாவட்ட பதிவாளர் 8 வருடகால காணிப் பதிவாளர் அலுவலக அனுபவம் பெற்றிருந்தாலும் அவர் மீது பலவகையான முறைப்பாடுகள் பதிவாளர் நாயகத்திற்கு கிடைத்துள்ளதான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய பதிவாளராக நியமிக்க முடியாத துர்பாக்கிய நிலை தோன்றியுள்ளதாக மேலும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்
கல்முனை காணிப் பதிவகத்தைப் பொறுத்த மட்டில் 2 மேலதிக மாவட்ட பதிவாளர்கள் கடமையாற்றி வந்த போதிலும் அங்கு தமிழர் ஒருவர் மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றி வந்துள்ளார்.
குறித்த பதிவாளரும் கல்முனை காணிப் பதிவகத்திலிருந்து சென்றுள்ள நிலையில் அங்கு தமிழர் ஒருவரின் வெற்றிடம் உள்ளது என்றும், அங்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மக்களின் கோரிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆம். நாடு முழுவதும் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடங்கள் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் பிரதேச செயலாளர் செயலங்களில் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடமாக உள்ளதனால் அங்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களை பதில் கடமையாக மேலதிக மாவட்ட பதிவாளராக கடமையாற்றுமாறு பதிவாளர் நாயகம் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.
மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி மிகவும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அரசாங்கம் தற்போதய நெருக்கடி நிலையில் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி குறித்தான நியமனம் செய்யும் நிலையில் இல்லை.
அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் மேலதிக மாவட்ட பதிவாளர் பதவி வெற்றிடமாகவுள்ளதான தகவல்கள் வெளிவருகிறது.
கல்முனை காணிப்திவகத்தில் மாவட்ட மேலதிக பதிவாளராக தமிழர் ஒருவரை நியமிக்கத் தேவையான நடவடிக்கைளை செய்து தருமாறு ஊடகவியலாளர்கள் சிலர் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்துடன் கோரிக்கை குறித்து பேசி விரைவில் தமிழ் மேலதிக மாவட்ட பதிவாளர் ஒருவரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொறுப்பு வாய்ந்த பதவியாக காணிப்பதிவாளர் பதவியை அடையும் ஒருவர் எல்லோரையும் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதுடன் அவருக்கு எதிராக பதிவாளர் நாயகத்துக்கு எந்தவொரு முறைப்பாடும் செல்லாமல் அவரது பணி அமைய வேண்டும் என மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக கல்முனை காணிப்பதிவகத்தில் நிரந்தர பதிவாளர் ஒருவர் இன்னும் நியமனம் செய்யப்படாமல் உள்ள நிலையில் 3 அதிகாரிகள் கடமையாற்றிய காரியாலயத்தில் அங்கு மேலதிக பதிவாளராக கடமையாற்றும் உத்தியோகத்தர் மாத்திரம் தனியாளாக பல சிரமங்களின் மத்தியில் கடமையாற்றி வருகின்றார்.
இதற்கு முன்னர் கல்முனை பிரதேச செயலக விடயமாக கல்முனையில் இரண்டு இனங்கள் இடையே கசப்பாக இருந்து வரும் நிலையில் கல்முனை காணிப்பதிவகத்தில் தமிழ் அதிகாரி ஒருவர் இல்லாமல் தனியாக முஸ்லிம் அதிகாரிகள் மாத்திரம் கடையாற்றி வந்தால் மேலும் இந்தப் பகுதியில் இனக்கசப்பு ஏற்பட மிக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை அடுத்த வாரம் கல்முனை காணிப் பதிவகத்திக்கு நிரந்தர பதிவாளராக ஒருவரை நியமிக்கத் தேவையான நடவடிக்கைளை பதிவாளர் நாயகம் திணைக்களம் செய்து வருவதாக கூறப்படுகிறது.