முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பம் (Photos)
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதற்கமைய இன்று (01.11.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடாத்த சிரமதான பணிகள் பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்படுவது வழமை ஆகும்.
மாவீரர் நாள் நிகழ்வு
இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது.
முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும்
அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த
பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்துள்ளனர்.







