காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய வந்தாறுமூலை மக்கள்
மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பாவிக்கப்பட்டுவந்த காணியை சிலர் அபகரிக்க முற்படுவதாக தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தாறுமூலை கிழக்கு தேவாபுரம் என்னும் பகுதியில் உள்ள மக்களே இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் வந்தாறுமூலை-தேவாபுரம் வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸாரே சட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்து, விளையாடுவதற்கு மைதானம் தரவேண்டும், ஏறாவூர்பற்று பிரதேச சபையே எமக்கான விளையாட்டு மைதானத்தினை பெற்றுத்தாருங்கள், விளையாட்டு மைதானத்திற்கான நிரந்தர தீர்வினை தாருங்கள், 50 வருட எங்கள் உரிமையினை மீறாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் நீண்டகாலமாக குறித்த காணியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவரும் நிலையில் அதனை சிலர் தனியார் காணியென கூறி அடைக்க முற்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 50 வருடத்திற்கு மேலாக குறித்த காணியை தாங்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவரும் நிலையில் இன்று தங்களது காணியென கூறி சிலர் அப்பகுதியை வேலியடைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லாத காரணத்தினால் இந்த மைதானத்தையே பயன்படுத்திவரும் நிலையில் குறித்த விளையாட்டு மைதானத்தினை அபகரிக்கும் செயற்பாடுகளை சிலர் முன்னெடுத்து வருவருதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த விளையாட்டு மைதானத்தினை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்ற போதிலும் இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் குறித்த பகுதி விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலை என்பன இணைந்தே புனரமைத்து விளையாட்டு நிகழ்வுகளை நடாத்திவருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றர்.
குறித்த விளையாட்டு மைதானத்தினை குறித்த பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்,சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட அரச திணைக்களங்களும் பயன்படுத்திவரும் நிலையிலேயே இந்த விளையாட்டு மைதானத்தினை அபகரிக்க முற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விளையாட்டு மைதானத்தினை புனரமைத்து அதனை விளையாட்டு மைதானமாக பிரகடனப்படுத்துவதற்கான செயற்பாட்டினை ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
