இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்படும் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் (Photos)
சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக நாளுக்கு நாள் பலவேறு பொருட்கள் கடத்தப்படுகின்றது.
தனுஷ்கோடி-வேதாளை
தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட 1100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை, மரைக்காயர்பட்டிணம், சீனியப்பா தர்கா கடற்கரையில் இருந்து நேற்று நள்ளிரவு நாட்டுப்படகில் சட்டவிரோதமாக மர்ம பொருள் ஒன்று இலங்கைக்கு கடத்திச் செல்ல இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வேதாளை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் ஏறிய பொலிஸார் அந்த படகை முழுமையாக சோதனை செய்த போது படகுக்குள் சுமார் 20 மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டுப்படகில் இருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கைப்பற்றிய சிறப்பு தனிப்படை பொலிஸார் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாருக்கு, வனத்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்ததிருந்த வனத்துறையினர் நாட்டுப்படகில் இருந்து கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மூட்டைகளைப் மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று எடை போட்டு பார்த்த போது 20 சாக்குகளில் மொத்தமாக 1100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நாட்டுப்படகை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் நாட்டுப் படகின் உரிமையாளர் மற்றும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை, வேதாளை, மரைக்காயர்பட்டிணம் சீனியப்பா தர்கா, உள்ளிட்ட கடற்றொழிலாளர் கிராமங்களில் தீவிரமாக தேடுதல் நடத்திவருகின்றனர்.
செய்தி: எரிமலை
தனுஷ்கோடி
தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் கடத்த இருந்த சுமார் 1000 லிட்டர் நகப்பூச்சு (nail polish) வாசனையுடன் கூடிய திரவங்கள் அடைக்கப்பட்ட 46 பிளாஸ்டிக் கேன்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை தெற்கு தெருவில் புர்கான் அலி என்பவருக்கு சொந்தமான அரசு தூய்மை பாரத திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பிளாஸ்டிக் கேன்களின் நகப்பூச்சு மற்றும் அது சார்ந்த மூலப் பொருட்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் சட்ட ஒழுங்கு பொலிஸார், கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் மற்றும் ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு பொலிஸார் அடங்கிய குழு நேற்று அதிகாலை வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் இருந்து 46 பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 1000 லிட்டர் நகப்பூச்சு வாசனையுடன் கூடிய திரவங்கள் மற்றும் நகப்பூச்சு போத்தலில் உள்ள சிறிய பிரஷ்கள் உதிரிகளாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து நகப்பூச்சு வாசனையுடன் கூடிய திரவங்கள் அடைக்கபட்ட பிளாஸ்டிக் கேன்கள் பறிமுதல் செய்த பொலிஸார் அதனை மண்டபம் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் நகப்பூச்சு வாசனையுடன் கூடிய திரவங்கள் அடைக்கபட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் வேதாளை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்தது வீட்டின் உரிமையாளரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேதாளை கடற்றொழிலாளர் கிராம கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலை, ஐஸ் போதை பொருள், கஞ்சா, கஞ்சா ஆயில், செருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்துவதற்காக நகப்பூச்சு வாசனையுடன் கூடிய திரவங்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்கின்றனர் அதிகாரிகள்.
கடந்த சில நாட்களாக வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பல பொருட்கள் கடத்தப்படுவதுடன், இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை வழியாக தமிழகத்திற்குள் தங்கம் கடத்தி வரப்படுவதால் சர்வதேச கடத்தல்காரர்களின் புகலிடமாக வேதாளை மீனவ கிராமம் மாறி உள்ளதா என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம்
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ். குருநகர்ப் பகுதியில் நேற்று கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவே கடலில் வைத்து கைப்பற்றப்பட்டது.
இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த ஒருவரை் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்னர்.
செய்தி தீபன்
மானிப்பாய்
கடந்த 12.12.2022 அன்று 2448 கிலோ மஞ்சளுடன் மானிப்பாய் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்பட்டுத்தப்பட்டனர்.
இதன்போது மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஒரு இலட்சம் ரூபா தண்டம் அறவிட்டதோடு 2448 கிலோ மஞ்சளையும் அரச உடமையாக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி கஜிந்தன், தீபன்
