தடுப்பூசிகள் வந்து விட்டன: தம்மிக்க பாணி நிறுத்தப்படுமா?
உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை சாதாரண செய்தியாக ஏற்றுக்கொண்ட இலங்கை மக்கள், தமது நாட்டு சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று என்றவுடன் சற்று திடுக்கிட்டு தான் போயினர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நாட்டின் முதல் வெளிநாட்டு கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் சுகமான சீனப்பெண்ணை நெற்றியில் முத்தமிட்டு அவரது நாட்டுக்கு அனுப்பி வைத்தது முதல், இலங்கையில் தொற்றாளர்கள் அதிகமானவுடன் ஆசிர்வதிக்கப்பட்ட நீரை ஆற்றில் கொட்டியது, பின்பு கொரோனா பாணி மருந்தை சாப்பிட்டது வரை அவர் கொரோனாவுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தவர். அவருக்கே இந்த நிலைமையா என்று சமூக ஊடகங்களில் அவரை வறுத்தெடுத்து விட்டனர் இலங்கை மக்கள்.
மிக முக்கியமாக இலங்கை மருத்துவர்களால் புறக்கணிக்கப்பட்ட கொரோனா பாணியை அருந்திய அவருக்கு தொற்று ஏற்பட்டது ஒரு புறம் இருக்க, அதற்கு அந்த பாணியின் உரிமையாளர் கொடுத்த விளக்கம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'நான் தயாரித்த பாணியை அருந்திய சுகாதார அமைச்சருக்கு தொற்று ஏற்பட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது' என அவர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 'கொரோனாத் தடுப்புப் பாணி வழங்கப்பட்டபோது என்னால் அமைச்சருக்கு கூறப்பட்ட அறிவுரைகளை அவர் பின்பற்றவில்லை. அதாவது இந்த பாணியை குடித்தால் புகைப்பிடித்தல், மது பாவனை, மாமிசம் உட்கொள்ளுதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எனினும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நான் தவிர்க்கும்படி கூறிய இரண்டு விடயங்களைச் செய்ததன் காரணமாகவே இப்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாமிசம் உண்பது சரி மற்றைய இரண்டு விடயங்களில் ஏதாவதொன்றை சுகாதார அமைச்சர் செய்தாரா என்பதே நாட்டு மக்களினதும் கேள்வியாக உள்ளது. சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று என்று அறிந்தவுடன் கேகாலை பாணி மருத்துவரான தம்மிக்க பண்டாரவின் வீட்டுக்குச் செல்வதா வேண்டாமா என மக்கள் யோசித்தாலும், பின்னர் அவரால் கூறப்பட்ட விளக்கத்துக்குப்பிறகு கூட்டம் அலை மோதியது. அவர் ஒரு சிறந்த சந்தைப்படுத்தல் விற்பனர் என பிறகு புகழாரம் சூட்டப்பட்டது.
குறித்த பாணி மருந்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் எந்த அம்சங்களும் இல்லை என்றும் இது இலங்கையில் மருத்துவ ரீதியாக பரிசீலித்துப் பார்த்து உறுதிப்படுத்தப்படவில்லையென்றும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சுதேசிய மருத்துவ துறை அதிகாரிகளும் , பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர்களும் கூறியும் ' தம்மிக்க பாணியை ' நிறுத்த முடியவில்லை. இதன் பின்புலத்தில் உள்ள அரசியல் என்னவென்பதே பலரினதும் கேள்வி.
கேகாலை தம்மிக்க பண்டார வீட்டுக்கு அதிகாலை 3 மணியிலிருந்து வரிசையாக கூட்டம் நிற்கின்றது. அவ்வாறு ஒன்று கூடுவதால் தொற்று பரவல் வேகம் அதிகரிக்கும் என அப்பிரதேச பொலிஸார் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் , பொது சுகாதார உத்தியோகத்தர்கள் பலரும் கூட்டத்தை கலைந்து போக கூறினாலும் ஒன்றும் இடம்பெற்றதாக தெரியவில்லை. கடந்த வாரம் இடம்பெற்ற ஒரு சம்பவம் இந்த தம்மிக்க பண்டாரவின் பின்னணியில் ஒரு வலுவான அரசியல் சக்தி இருப்பதை உறுதி செய்துள்ளது.
தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக முறைப்பாடு
பேராதனை போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் ஐவர் தமது சக உத்தியோகத்தர்களுக்கு இந்த கொரோனா பாணியை கொள்வனவு செய்ய தம்மிக்க பாண்டார வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். தாம் 87,500 ரூபாய் பணம் எடுத்து வந்ததாகவும் 175 மி.லீற்றர் கொரோனா பாணி மருந்து போத்தல்கள் 35 ஐ கொள்வனவு செய்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாணி மருந்து கலவையின் உள்ளீடு பற்றி அங்கு இருந்த ஒருவரின் உரையாடலை வைத்தியர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்த போது அதை குறித்த நபர் சந்தேகித்து உடனடியாக தம்மிக்க பண்டாரவிடம் கூறியவுடன் அவர் உடனடியாக வைத்தியரை தாக்கியதுடன் அவரது கையடக்கத்தொலைபேசியையும் கீழே அடித்து நொறுக்கியுள்ளார்.
அந்த மருத்துவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கோர வைத்து அதை அப்போதே பதிவு செய்து தனது முகநூல் பக்கம் தம்மிக்க பண்டார பகிர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் வைத்தியர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டதுடன் மூன்று மணித்தியாலயங்களுக்குப் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ள வைத்தியர் ஏ.ஆர். மத்துமபண்டார என்பவர் அந்த நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவே அவ்வாறு ஒரு அறிக்கையை நாம் வெளியிட வேண்டியேற்பட்டதாகத் தெரிவிக்கிறார். இந்த புகார் கேகாலை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பின்னர் தம்மிக்க பண்டார வீட்டுக்கு ஒரு பொலிஸ் குழு விசாரணைக்கு சென்றுள்ளது. ஆனால் அந்த குழுவோ ஒரு மூத்த அதிகாரியின் அறிவுறுத்தலின் படி திரும்பி வந்து விட்டது. பின்னர் இந்த முறைப்பாடு வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டாலும் ஒன்றும் நடக்கவில்லையென்பது முக்கிய விடயம். தம்மிக்க பண்டார தயார் செய்யும் பாணி மருந்து 175 மி.லீற்றர் போத்தலொன்று 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பாணி மருந்தில் என்ன தான் உள்ளது என ஆராய சுதேச வைத்திய பிரிவின் குழுவொன்று தம்மிக்க பண்டாரவின் வீட்டிற்கே சென்றது. ஆனால் அவரது குழுவினர் அதில் என்ன கலக்கின்றனர் என்பதை காட்ட மறுத்து விட்டனர். ஆகவே அந்த பாணியையே அவர்கள் பரிசோதிக்க அனுப்பியுள்ளனர். அதன் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அறிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையிலேயே சுகாதார அமைச்சருக்கே கொரோனா வந்து விட்டது. அறிக்கை வருவதற்கு முன்பு தற்போது தடுப்பூசிகளும் வந்து விட்டன.
தடுப்பூசிகள் வந்து விட்டன
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து முதற்கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் கடந்த 28 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தன. இவை இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாகவே வழங்கப்பட்டுள்ளன. சீனாவும் ஒரு தொகை தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய நேரடியாகவே இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இலவசமாக கிடைத்துள்ள இந்த தடுப்பூசிகள் இலவசமாகவே மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இவ்வாறு தடுப்பூசிகள் கிடைத்தவுடன் கொரோனா பாணி நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த மருந்தில் என்ன உள்ளது என்றே தெரியாது கால் கடுக்க காத்திருந்து 2,500 ரூபாய் பணம் கொடுத்து வாங்கி அதை அருந்திய மக்களுக்கு தடுப்பூசி தேவையா தேவையில்லையா என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் ஒரு வருடம் செல்லலாம். அது வரை தம்மிக்க பண்டாரவின் கொரோனா பாணி மருந்து வேலை செய்யும் என்பது போல் தான் தெரிகிறது. அதாவது இலங்கை மக்களில் கடைசி தடுப்பூசி போடப்படும் வரை இந்த பாணி விற்பனை அமோகமாக விற்கப்படும் என்று தான் தெரிகின்றது. அதற்குள் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடவும் தயாராகி விடுவாரோ தெரியாது.