திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான கால அட்டவணை வெளியானது
திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள 18 பாடசாலைகளில் 5037 சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நாளை முதலாம் திகதி முதல் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் முதலாம் திகதி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும், 2ஆம் திகதி திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் அபயபுர மகா வித்தியாலயத்திலும், 3ஆம் திகதி மெதடிஸ் பெண்கள் கல்லூரியிலும் சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 5ஆம் திகதி புனித மரியாள் கல்லூரியிலும், 6ஆம் திகதி ராஜகிரிய வித்தியாலோக வித்தியாலயத்திலும், அபேயபுர பெண்கள் உயர்நிலை பாடசாலையிலும் இவ்வாறு கோவிட் தடுப்பு மருந்து செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 9ஆம் திகதி திருகோணமலை சாஹிரா கல்லூரியிலும், 10ஆம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்திலும், நாமகள் வித்தியாலயத்திலும், அதைத்தொடர்ந்து 11ஆம் திகதி பெருந்தேரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், சென் சேவியர் மகாவித்தியாலயம், நாமகள் மகாவித்தியாலயத்திலும், 15ஆம் திகதி புனித சூசையப்பர் கல்லூரியிலும், 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ஸ்ரீ சண்முகா இந்து பெண்கள் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி மற்றும் ஸ்ரீ கோணலிங்கம் மகா வித்தியாலயத்திலும் இவ்வாறு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தும் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பெற்றோர்களின் அனுமதியுடன் இவ்வாறு தடுப்பூசியினை தவறாமல் மாணவர்கள் பெற்றுக் கொள்ளுமாறும் கோவிட் 19 தொற்றிலிருந்து மாணவர்களையும் நாட்டையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

