ஈரான் மீது அமெரிக்கா 3ஆவது கட்டமாக தாக்குதல்: 140 இராணுவ நிலைகள் தரைமட்டம்
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த 'எம்.வி ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' என்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அண்மையில் தீவிர தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அதன் என்ஜின் பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், கப்பல் ஊழியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தாக்கி அழிக்கப்பட்ட இலக்குகள்
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த தீவிரத் தாக்குதலில், ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தளங்கள், கடற்படை உள்கட்டமைப்புகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடலோர கண்காணிப்பு மையங்கள் ஆகியவை முக்கியமாக குறிவைக்கப்பட்டுள்ளன.

இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் 300க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச கடல் வழித்தடங்களில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் தவறிவிட்டதாகவும், அதற்கான தகுந்த விலையை ஈரான் தற்போது செலுத்தி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.