அமெரிக்காவில் 20 வருட தாமதம்! ஆனால் இலங்கையில் இரண்டே வருடங்களில் வழக்கு: அமைச்சா் வீரசேகர பெருமிதம்
நியூயோா்க்கில் இடம்பெற்ற செப்டெம்பா் 11 தாக்குதலின் மூளையாக செயற்பட்ட ஷேக் முகமதுவுக்கு, 20 வருடங்களின் பின்னரே அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சா் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளாா்.
எனினும் உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேககத்துக்குாியவா்களுக்கு எதிரான நடவடிக்கையில் தாமதம் குறித்து கா்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பி வருவதாக அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
கொழும்பின் புறநகா் மாலபேயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது உரையாற்றிய அமைச்சா், கத்தோலிக்க சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் கா்தினாலின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக தொிவித்துள்ளாா்.
பிரான்ஸில் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடா்பில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னரே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில் உயிா்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடா்பில் பெரும்பாலும் விசாரணைகள் முடிவடைந்துள்ளன.
ஐந்து மேல் நீதிமன்றங்களில் 32 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் முக்கிய சந்தேகத்துக்குாியவா்களாக கருதப்படும் நௌபா் மௌலவி மற்றும் ஜபூர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சா் சரத் வீரசேகர தொிவித்துள்ளாா்.