தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும்
ஈழத்தமிழர் அரசியலில் எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பி அரசியல் பேசும் யுகம் ஒன்று தோன்றிவிட்டது.
கறுப்பு ஜூலை மாதத்தில் தமிழ் இனத்தின் எலும்புக்கூடுகளை நினைவு கூர்ந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டவர்களே என்ற காலயுகம் மாறி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவர்களே அரசியலுக்கு வழிகாட்டும் அரசியல் சூழல் தோன்றி விட்டது என்பதை உரத்துச் சொல்வோம்.
எலும்புக்கூடுகள் எனப்படுவது இரத்தம் சிந்தப் புதைக்கப்பட்டவர்களாக இருக்கலாம், ஆதிக்க சக்திகளினால் வஞ்சிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களாக இருக்கலாம், மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறாக இருக்கலாம். இவை அனைத்தும் எலும்புக்கூடுகள் என்ற தொகுதிக்குள் அடங்குகின்றன.
தேசிய இனங்களின் விடுதலைக்கான
புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டவை இன்று மேல் எழுந்து வாழ்வையும் வரலாற்றையும் மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தனவாக தோற்றம் பெறும் காலம் ஒன்று இப்போது நம்மிடம் உள்ளது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலுக்கு பின்னர் உலகம் தழுவிய அரசியலில் பயங்கரவாத பட்டியலில் தேசிய இனங்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களும் இடம்பெற்று விட்டன.
இதனால் தேசிய இனங்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களும் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தப்பட்டு விட்டன.
இந்த அரசியல் போக்கிற்குள் உலகம் தழுவிய தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் கடந்த கால்நூற்றாண்டுகளில் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டுவிட்டன.
அந்த அடக்கி ஒடுக்கப்பட்டவற்றில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும், பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் பெரும் அழிவை சந்தித்தன.
இதில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பெரும் அழிவையும் சொல்லெணாத் துயரங்களையும் சந்தித்தது. வகை தொகையின்றி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு புதைகுழிக்குள் புதைக்கப்பட்டார்கள்.
இந்தப் பின்னணியில் இப்போது புதைக்கப்பட்ட புதைகுழிகள் தோண்டப்பட்டு எலும்புக்கூடுகள் வெளியே வந்து புதிய அரசியல் செயற்போக்கை தோற்றுவித்திருக்கிறது.
சர்வதேச பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற உலகளாவிய சட்ட நடைமுறைக்கு பின்னர் ஆயுதப் போராட்டம் பின்னோக்கித் தள்ளப்பட்ட நிலையில் இப்போது மக்கள் கிளர்ச்சி அரசியல், மக்கள் புரட்சி ஜனநாயகமும் வலுவடையத் தொடங்கிவிட்டன.
இத்தகைய மக்கள் கிளர்ச்சி, புரட்சி ஜனநாயகத்தை முன்கொண்டு செல்வதற்கு ஈழத்தமிழர்களுக்கு கூறிய ஆயுதங்கள் தேவைப்படுகிறன. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதனைக் கொண்டுதான் எதனையும் படைத்திட முடியும்.
ஆகவே ஈழத் தமிழர்களிடம் எஞ்சி இருப்பது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இனப்படுகொலை என்ற ஆயுதம் மட்டுமே. ஆகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரும், படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இப்போது தோண்டி எடுக்கப்படும் அந்த எலும்புக் கூடுகளையும் நாம் கூர்மையான ஆயுதமாக்குவோம்.
எலும்பு கூடுகளின் அரசியல்
இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் துயர் தோய்ந்த வரலாற்றை கூர்மையான ஆயுதமாக்குவோம். மறைக்கப்பட்ட வரலாற்றை கூர்மையாக்குவோம். காணாமல் ஆக்கப்பட்டோரை அவர்களது பட்டியலை கூர்மையான ஆயுதமாக்குவோம். விதவைகள் ஆக்கப்பட்டோரை கூர்மையான ஆயுதமாக்குவோம். அங்கவீனராக்கப்பட்டவர்களை கூர்மையான ஆயுதம் ஆக்குவோம்.
மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை கூர்மையான ஆயுதமாக்குவோம். இந்த அடிப்படையில் ஒட்டுமொத்தமாக அந்தக் கூர்மையான ஆயுதங்களில் ஈழத்தமிழர்களை பொறுத்த அளவில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதுவே ஒரு மிகக் கூர்மையான ஆயுதம்.
அதுவே உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களுக்கான நீதியையும், விடுதலையையும் பெற்றுத் தருவதற்கான திறவுகோலாகவும் அமையும்.
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் அல்லது ஆயுதங்கள் கீழே போடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பின்னர் தமிழ் மக்களுடைய போராட்டமும், வரலாறும் நின்றுபோய் விடவில்லை. அல்லது மறக்கப்பட்டு விடவில்லை. இப்போது எலும்புக்கூடுகளும் பேசும் காலம் தோன்றியுள்ளது.
இந்தக் காலத்தை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எலும்புக்கூடுகளின் மொழியைப் புரிந்து கொள்ளாவிட்டால் எலும்பு கூட்டு அரசியலையும் புரிந்து கொள்ள முடியாது.
எனவே எலும்புக்கூடுகளின் மொழியை நாம் புரிந்து கொள்வோம். அது இரத்தமும், சதையுமாய் ஆதாரபூர்வமாக வரலாற்றைச் சொல்கிறது.
எலும்புக்கூடுகள் அன்று இரத்தம் சிந்த புதைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இன்று அவர்கள் மற்றவர்களின் கண்களில் கண்ணீரை சிந்து வைத்து வெளியே வருகிறார்கள்.
எலும்புக்கூடுகள் பேசும் கண்ணீர் கதைதான் எதிர்கால வரலாற்றை முன்னெடுத்து முன்னோக்கிச் செல்ல போகிறது. இதனைத் தமிழ் தலைவர்களும், அறிஞர்களும், புத்துஜீவிகளும், ஊடகவியலாளர்களும், சமூக நலன் விரும்பிகளும் எவ்வளவு தூரத்துக்கு இதனைப் புரிந்து கொள்கிறோமோ, இதனை எவ்வாறு நாம் முதலீடாக்க முடியும் என்று இனம் காண்கின்றோமோ, அவ்வளவுக்கு தமிழ் மக்களுக்கான எதிர்காலத்தை ஒளிமாயமானதாக மாற்ற முடியும்.
எழும்புக்கூடுகள் தமிழ் மக்களின் இருள் நிறைந்த பாதையில் ஒளி விளக்காக வெளிச்சம் காய்ச்சவல்லது. எலும்புக்கூட்டு வரலாற்றில் வெற்றி பெற்ற யூதர்கள் தமது அன்றாட வாழ்நாளல் எந்த ஒரு நிகழ்வுகளிலும் எலும்புக்கூடுகளை நினைவு கூறாமல் விடுவதில்லை. அதுவே அவர்களுக்கு வழிகாட்டுகிறது. அதுவே அவர்களை பலப்படுத்துகிறது. அதுவே அவர்கள் மத்தி கிழக்கில் 53 கோடி இஸ்லாமியர்களுக்கு நடுவில் வெறும் 64 லட்சம் யூதர்களை நிமிர்ந்து உறுதியாக, நம்பிக்கையோடு வாழ வைக்கிறது.
யூதர்களின் எலும்பு கூடுகளினால் கட்டப்பட்ட தேசியவாதம்
உலகில் எங்காவது ஒரு யூதன் கொல்லப்பட்டால் அல்லது காயப்பட்டால் ஒவ்வொரு யூதனும் கொல்லப்பட்ட, காயப்பட்ட யூதனுக்காக கொதித்த குரல் கொடுக்கிறான், உதவ முன்வருகிறான். துன்பப்படும் யூதனுக்காக ஒவ்வொரு யூதனும் கொதித்தெழுகிறான், வேதனையடைகிறான், எழுச்சி கொள்கிறான், கைகொடுக்கிறான். "யூதனே யூதனை கண்டால் யூதனுக்கு உதவுங்கள்" இதுவே யூத இன தேசிய எழுச்சி.
அது கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட யூதர்களின் எலும்பு கூடுகளினால் கட்டப்பட்ட தேசியவாதம். மேற்படி எலும்புக்கூட்டு வரலாற்று அரசியலை தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசை அடைவதற்கான போராட்டத்தில் முதலீடாக்க வேண்டும்.
அதற்காக தமிழர்கள் பௌத்த சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்கள் அனைத்தையும் வரலாறாக பதிவு செய்ய வேண்டும். அந்த வரலாற்றுப் பதிவேடுகளே நமக்கான எலும்புக்கூடுகளாகவும் இருக்கும்.
அந்த எலும்பு கூடுகள் நம்மைப் பற்றி பேசும், புதைக்கப்பட்ட எலும்பு கூடுகளும் பேசும், மறைக்கப்பட்ட வரலாறுகளும் எலும்புக் கூடாக எழுந்து நின்று பேசும். அதுவே தமிழ் தேசிய இனத்தையும், அதனுடைய பண்பாட்டையும், அதனுடைய சுதந்திர வேட்கையையும் வெளியுலகுக்குச் செல்லும். அதுவே எம்மை வழிநடத்தும்.
கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு
இந்த இடத்தில் தமிழினம் பட்ட துன்பங்களை எலும்பு கூட்டு அரசியலாக, வரலாறாக, பண்பாடாக, துயர் தோய்ந்த மனவடுக்களாக, கூட்டு காயங்களாக எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதனை 2019ம் ஆண்டு கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு பேருரை ஆற்றிய மா.நிலாந்தனின் வார்த்தைகளில் இருந்து மேற்கோள் காட்டுவது சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்.
""மே மாதத்தில் ஏதோ ஒரு நாளில் உங்கள் வீடுகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சலாம். இந்தக் கஞ்சி அங்கு அவர்கள் குடித்த கஞ்சியை விட சுவையானதாகத்தான் இருக்கும். இல்லையென்றால் நீங்களும் தேங்காய்ப்பால் இல்லாமல் கஞ்சியை காச்சி குடிக்கலாம்.
அந்தக் கஞ்சியை உங்கள் இளைய தலைமுறைக்கு குடிக்க கொடுத்து அதன் காரணத்தை குழந்தைகளிடம் விளக்கிச் சொல்லுங்கள்.“ “இந்த கஞ்சியை அருந்து இது உன் முன்னோர்கள் பட்ட துயரத்தின் சுவையை காட்டும். இந்தக் கஞ்சி அருந்து இது ஒரு பெருங்கடலுக்கும் சிறுகடலுக்கும் இடையே இருந்த நரகத்தில் உன் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்தான் என்பதை அது உனக்கு உணர்த்தும்.
இந்த கஞ்சியை அருந்து நாங்கள் இனிமேலும் ரத்தம் சிந்தக்கூடாது என்பதை உனக்கு உணர்த்தும். இந்த கஞ்சியை அருந்து நாங்கள் இனிமேலும் தோற்கக்கூடாது என்பதை உனக்கு உணர்த்தும்.
இந்த கஞ்சியை அருந்து தமிழனின் கூட்டுக் காயங்களில் இருந்தும் கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு புதிய ஜனநாயகம் ஊற்றெடுக்க வேண்டிய அவசியத்தை அது உனக்கு உணர்த்தும். என்று கூறி அந்தக் கஞ்சியை அவர்களுக்கு அருந்த கொடுக்கலாம்.“ “எப்படி உங்கள் வீட்டில் வைத்திருக்கும் மிளகாய்த்தூள் மூலம் ஒரு இனத்தின் ருசி அந்த வேர் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறதோ அப்படியே ஒரு துயரமான காலகட்டத்தின் அந்த நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தலாம்.
அந்த கஞ்சியை குடிக்க கொடுத்து அவர்களுக்கு உன்னுடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் எப்படி கனடாவுக்கு வந்தோம் இது எங்களைத் தாயகத்திலிருந்து எப்படி துரத்தியது என்ற காரணத்தை அந்த பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்."
கனடா தேசத்தில் மா.நிலான் 2019 முள்ளிவாய்க்கால் நினைவு பேருரையில் குறிப்பிட்ட இந்தப் பொன்னான வாக்கியங்கள் ஈழத் தமிழர்களின் வரலாற்றை மீழ்கட்டுமானம் செய்வதற்கும், தமது பண்பாட்டை தொய்வின்றி தொடர்ச்சி குன்றாமல் காப்பதற்கும், நமது நினைவுகளையும், மனவடுக்களையும் வற்றிலாக்கி சுமந்து செல்வதற்கும், நமது அரசியலை உலகம் தழுவிய அரசியலோடு பண்பாடாக மாற்றி நிலைநிறுத்தவதற்குமான நாளாந்த நடைமுறையாக மாற்றி அமைக்க வேண்டும்.
எலும்புக்கூடுகள் பேசும் ஒரு புதிய அத்தியாயம்
சர்வதேச அரசியலிலும் சரி, உள்நாட்டு அரசியலிலும் சரி, ஈழத் தமிழனுடைய அரசியலையும் சரி எலும்புக்கூடுகள் பேசும் ஒரு புதிய அத்தியாயம் தோன்றிவிட்டது.
இரத்தம் சிந்திப் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் மீளவெழந்து உலகத்தை கண்ணீர் சிந்த வைக்கிறது.
ஈழத்தில் செம்மணி, முள்ளிவாய்க்காலாக இருக்கலாம். அல்லது ஸ்ரீலங்காவில் வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்டு இரகசியமாகப் புதைக்கப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதியாகவும் இருக்கலாம், பாலஸ்தீனத்தில் காசாவாகவும் கொல்லப்ட்வர்களாகவும் இருக்கலாம்.
எலும்புக்கூடுகள் அரசியலை பேசும், இந்த அடிப்படையில்தான் இந்த மாதம் ஐநாவுக்கான மனித உரிமை ஆணையாளர் செம்மணி பகுதியில் மனித புதைகுழி அகழ்வு தளத்தைச் பார்வையிட்டு சென்றார்.
இது எதிர்வரும் ஐநா மனித உரிமை அமர்வில் எதிரொலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. புதைக்கப்பட்டவர்கள் மீது கோட்டைகள், கொத்தளங்கள் கட்டப்பட்டு இருக்கலாம். சந்தைகள் மத தலங்கள் கட்டப்பட்டிருக்கலாம். வீதிகள் பாலங்களும் கட்டப்பட்டும் இருக்கலாம். ஆனால் அவை ஒரு நாள் தோண்டப்பட்டு எலும்புக்கூடுகள் வெளியே வந்து இரத்தம் தோய்ந்த துயர வரலாற்றைச் சொல்லும்.
அதுவே ஈழத் தமிழர்களுடைய எதிர்கால வரலாற்றின் செயற்போக்கை மாற்றியமைக்கும். எலும்புக்கூடுகள் எமது எண்ணங்களதும், உணர்வுகளினதும், கூட்டு வலிகளினதும், வேதனைகளினதும் ஒட்டுமொத்த திரட்சியாய் எமது எதிர்காலத்திற்கான கோபுரமாக ஆக்குவோம்.
எதிரிகள் எம்மாவரை இரத்தம் தோயப் பிணங்களாக புதைத்தான். ஆனால் நாங்கள் அவர்களின் எலும்புக்கூடுகளை மீட்டெடுத்து வரலாறாக்கி உயர்ந்த கோபுரம் ஆக்குவோம்.
இந்த கறுப்பு ஜூலை மாதத்தில் தமிழ் மக்களின் சொல்லொணா துன்பங்களையும் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக்கூடுகளை தூக்கிப் பிடித்து மனித உரிமைகளுக்கான பிரகடனமாக, ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலை கீதமாக, மேல் எழுந்திருக்கும் எலும்புக்கூடுகளின் குரல்களை உரத்து ஒலிக்கச் செய்வோம்.
அதுவே தமிழ் மக்களின் விடுதலைக்கான புதிய பாதையின் வழிகாட்டியாகவும், ஒளிவிளக்காகவும் துருவ நட்சத்திரமாகவும் அமையும்.
'வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி' அந்தக் கண்டிப்பான கிழவிக்கு அதாவது "வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாததை தவிர தெரியாதது ஒன்றுமில்லை" என்பர். வரலாறு யாரையும் விட்டு வைக்காது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 02 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




