மற்றுமொரு நாட்டை குறிவைத்துள்ள அமெரிக்கா! ட்ரம்பின் எச்சரிக்கையால் சூழ்ந்துள்ள பதற்றம்
ஈராக்கில் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கு இடம் அளிக்கப்பட்டால், ஈராக்கின் எண்ணெய் வருவாய் மற்றும் டொலர் பரிமாற்றத்தைத் துண்டிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கின் எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், அமெரிக்காவின் நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் உள்ள ஈராக் மத்திய வங்கி கணக்கில்தான் சேமிக்கப்படுகிறது.
அமெரிக்கா நிபந்தனை
2003-ம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, ஈராக்கின் நிதிப் புழக்கத்தின் மீது அமெரிக்கா மறைமுகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
தற்போது, ஈராக்கில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் ஈரானுடன் தொடர்புடைய 58 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் அளிக்கக்கூடாது என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

ஈரானுடன் தொடர்புடைய நபர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றால், ஈராக்கிற்கு டொலர் பரிமாற்றம் செய்வதை அமெரிக்கா நிறுத்திவிடும். இது ஈராக்கின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பயந்து, சக்திவாய்ந்த ஈரான் ஆதரவு குழுவான 'அசைப் அஹ்ல் அல்-ஹக்' (AAH) அதன் தலைவரை உயரிய பதவியிலிருந்து நீக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் செல்வாக்கு
ஈராக்கின் இறையாண்மையை ஆதரிப்பதாகவும், ஆனால் பயங்கரவாதத்தைப் பரப்பும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு ஆட்சியில் பங்கு இருக்கக்கூடாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரமான வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசிய ட்ரம்ப், தற்போது ஈராக்கின் நிதி வழிகளைத் தடுப்பதன் மூலம் ஈரானின் செல்வாக்கை பிராந்திய அளவில் குறைக்க முயல்கிறார்.
அதேவேளையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவைக் கைது செய்த அமெரிக்கா, அந்நாட்டின் எண்ணெய் வருவாயையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.