புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அமெரிக்கா - தாய்வான்
அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகமும் தாய்வானும் தங்களுக்கு இடையிலான இறுதி வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரிகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி தாய்வான் தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 20வீத வரியை அமெரிக்கா 15 வீதமாக குறைத்துள்ளது.
இதன் மூலம் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இணையான வர்த்தக வாய்ப்பை தாய்வான் பெற்றுள்ளது.
பாரிய முதலீடுகள்
மேலும் 2025 முதல் 2029 வரை சுமார் 85 பில்லியன் டொலர்கள் பெறுமதியான எரிசக்தி (LNG), விமானங்கள் மற்றும் மின்சாரக் கட்டமைப்பு உபகரணங்களை அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்ய தாய்வான் ஒப்புக்கொண்டுள்ளது.

அத்துடன், மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்கள் மீதான 26 வீதம் வரையிலான வரிகளை தாய்வான் உடனடியாக நீக்கும். இந்தநிலையில் அமெரிக்காவில் AI மற்றும் சிப் உற்பத்திக்காக தாய்வான் நிறுவனங்கள் 250 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யவுள்ளன.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாடுகளில் அமெரிக்க விதிமுறைகளை தாய்வான் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள தாய்வான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.