இ. ஜீன் கரோல் வழக்கு: டொனால்ட் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்தது அமெரிக்க உயர் நீதிமன்றம்
எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
கடந்த 1990களில் நியூயோர்க்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் வைத்துத் தம்மை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அது குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு தமக்கு அவதூறு ஏற்படுத்தியதாகவும் கூறி இ. ஜீன் கரோல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், ட்ரம்ப் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டது.
நஷ்டஈடு
கடந்த ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அம்மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி ட்ரம்ப்பின் சட்டத்தரணிகள் மீண்டும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, அந்த மறுபரிசீலனை மனுவையும் உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
அதேவேளை, ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கரோலின் குற்றச்சாட்டுகளை மறுத்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 83.3 மில்லியன் டொலர் நஷ்டஈடு விதிக்கப்பட்டிருந்தது.