ஈரானிய எரிபொருள் வர்த்தகத்துக்கு உதவிய இலங்கை நிறுவனத்துக்கு அமெரிக்கா தடைவிதிப்பு
ஈரானிய(Iran) எரிபொருள் வர்த்தகத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் இலங்கை(Sri lanka) நிறுவனமொன்றுக்கு அமெரிக்க(USA) அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஈரானிய எரிபொருளை சீனாவிற்கு(China) கொண்டு செல்ல உதவிய குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க திறைசேரியினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஈரானிய எரிபொருளை சீனாவிற்கு கொண்டு சென்ற'ஷானன் 2' கப்பலின் தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணியாற்றிய இலங்கை நிறுவனமான மரைன் சொல்யூஷன்ஸ் மீதே அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தடைவிதிப்பு
கொழும்பில் அமைந்துள்ள மரைன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஈரானிய எரிபொருளை கொண்டு சென்ற 'ஷானன் 2' கப்பலின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட செலஸ்டே மரைடைம் மீது அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை நிர்வாக உத்தரவுகள் மற்றும் திறைசேரி நிர்வாக உத்தரவுகள் என்பவற்றின் கீழ் ஈரானிய பெட்ரோலிய அமைச்சர் மொசைன் பக்னெஜாட்டின் சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்தைத் தடுக்க இந்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |