மத்திய கிழக்கு போர்: இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடை கேட்டறிந்த அமெரிக்க விசேட பிரதிநிதி
இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19.03.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அது உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது அமெரிக்கத் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு
குறிப்பாக மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு, போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் விநியோகச் சங்கிலி ரீதியான சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்களை அமெரிக்கத் தூதுக்குழுவினர் கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் செர்ஜியோ கோர்வுடன் வருகை தந்திருந்த உயர் மட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினரும் இதில் பங்கேற்றனர்.

