ராஜாங்க செயலாளரின் உக்ரைன் பயணத்தை உறுதிச்செய்த அமெரிக்கா! மேலும் 700 மில்லியன் ஆயுத உதவி!(Video)
உக்ரைனின் சில பகுதிகளை மிருகத்தனமாக நடத்துவதற்கு ரஷ்யா தொடர்ந்தும் முயற்சிக்கிறது.
எனினும் உக்ரைனியர்கள் வலுவாக நிற்கிறார்கள் என்று அமெரிக்க ராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார்.
உக்ரைன் வெற்றி பெறும் அதே வேளையில் மொஸ்கோ தனது போர் நோக்கங்களில் தோல்வியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவின் விளாடிமிர் புடின் நினைப்பதை காட்டிலும் ஒரு இறையாண்மை, சுதந்திரமான உக்ரைன் நீண்ட காலமாக இருக்கும் என்று ராஜாங்க செயலாளர் கூறியிருக்கிறார். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திப்பதற்காக ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் ஆகியோர் கீய்வ் சென்றதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனிய அதிகாரி ஒருவர் பிளிங்கன் உக்ரைனில் இருப்பதாக முன்னதாக கூறியிருந்தபோதும், அமெரிக்கா அது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
எனினும் இறுதி நேரத்தில் இந்த பயணத்தை உறுதிச்செய்த அமெரிக்கா, குறித்த அதிகாரிகள் இருவரும் உக்ரைனிய பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தது
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு அமெரிக்க இராஜதந்திரிகள் மேற்கொண்ட உயர்மட்ட விஜயம் இதுவான காரணத்தினால் பாதுகாப்பு கருதி பயணத் தகவலை அமெரிக்கா ரகசியமாக வைத்திருந்தது
இதேவேளை கீய்வில் நடந்த கூட்டத்தில், அமெரிக்கா, உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.
அத்துடன் அவர்களின் போர் முயற்சிகளுக்கு உதவ மேலும் 700 மில்லியன் டொலர் இராணுவ நிதியுதவியை உறுதியளித்துள்ளது.
இந்த பணத்தில் பாதி உக்ரைனுக்குச் செல்லும், மீதமுள்ளவை நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் பிற பிராந்திய நட்பு நாடுகளிடையே பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.