ஈரான் போருக்கு லாஜெஸ் விமானத் தளத்தைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி
ஈரான் மீதான போரின் போது, போர்த்துக்கல்லின் அஸோரஸ் தீவிலுள்ள லாஜெஸ் விமானத் தளத்தைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு மையம்-வலதுசாரி அரசு வழங்கிய அனுமதி சட்டபூர்வமானதா என்பது குறித்து போர்த்துக்கல் அரச வழக்கறிஞர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்க்கட்சி ஒன்று சமர்ப்பித்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண சமாதான காலத்தில் போர்த்துக்கல் அரசின் முன் அனுமதியின்றி அமெரிக்காவினால் இத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்றபோதிலும், போர்ச் சூழலின் போது அனுமதி பெறுவது கட்டாயமாகும் என இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒப்பந்தம் கூறுகின்றது.
விசாரணை
பக்கத்து நாடான ஸ்பெயின் போரிற்கு ஆதரவளிக்காத நிலையில், போர்த்துக்கல் அமெரிக்க இராணுவ விநியோக விமானங்களுக்கு அனுமதி வழங்கியமை அந்நாட்டு அரசியல் களத்தில் கடும் விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

இடதுசாரி பிளொக் கட்சியினர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போர்த்துக்கல் அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அனுமதியானது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.