170க்கும் மேற்பட்ட பயணிகள்… நடுவானில் நடந்த அதிர்ச்சி! Flydubai எடுத்த அதிரடி முடிவு
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த விமான நிறுவனமான ஃப்ளைதுபாய், துபாயிலிருந்து இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிரடியாக நிறுத்தம்
ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கைத் அல் கைத், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆதரவளித்து, அவர்கள் செல்ல வேண்டிய இறுதி இலக்குகளை அடைய உதவும் வகையில் நிறுவனத்தின் குழுக்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஒக்டோபர் 15ஆம் திகதி வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்படும் என ஃப்ளைதுபாய் தெரிவித்திருந்தது.

எனினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் மூலம் இந்த இடைநிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 30ஆம் திகதி ஃப்ளைதுபாய் விமானமொன்று இஸ்ரேலிய பயணிகளை ஏற்றிக்கொண்டு பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
மறு அறிவிப்பு
அந்த விமானம் துபாயிலிருந்து புறப்பட்ட பின்னர், அதன் வழக்கமான பாதையில் செல்ல முடியாமல் சவுதி அரேபியாவுக்கு திருப்பி விடப்பட்டிருந்தது.
விமானத்தில் 170க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்த நிலையில், விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் தலைமை விமானியை துணை விமானி கத்தியால் குத்தியதாகவும், இதையடுத்து பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இணைந்து துணை விமானியை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விமானத்தில் பயணித்த மாற்று ஃப்ளைதுபாய் விமானி குழுவினர் விமானத்தை வடமேற்கு சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.
இதையடுத்து, துணை விமானி சவுதி அரேபிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துபாய் – பென் குரியன் விமான சேவைகளை ஃப்ளைதுபாய் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தியுள்ளது.