மரண தண்டனைக்கு எதிராக சட்டப் போராட்டம்! அனோஜனுக்காக சவுதி செல்லும் முக்கிய குழு
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (5) சவுதி அரேபியாவுக்கு பயணிக்கவுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அனோஜன் சிவராசா
இந்தக் குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாய ஆகிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்குமாறு கோரும் மேன்முறையீடும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சவுதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மரண தண்டனை
இவ்விடயம் தொடர்பில் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவுதி அதிகாரிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம், சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்தொன்றின் அடிப்படையில் அனோஜன் சிவராசாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனையையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதத்தையும் விதித்திருந்தது.

இதற்கு எதிராக அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் குறித்த தண்டனைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கல்முனை, நட்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, தொழில் நிமித்தம் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.
YOU MAY LIKE THIS VIDEO