அமெரிக்க - ஈரான் பதற்றம் : கட்டாரில் இருந்த விலகும் அமெரிக்க படைகள்
ஈரானில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை ஒடுக்குமுறைக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இராணுவ நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வரும் நிலையில், கட்டாரில் உள்ள அல்-உடீத் (Al-Udeid) விமான தளத்திலிருந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தனது படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமான அல்-உடீத்தில் சுமார் 10,000 அமெரிக்க வீரர்களும், 100 பிரித்தானிய வீரர்களும் பணியில் உள்ளனர்.
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி
தற்போது நிலவும் பிராந்திய பதற்றத்தை கருத்தில் கொண்டு, "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றினால், அமெரிக்கா "மிகக் கடுமையான நடவடிக்கை" எடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
"இதற்காக ஈரான் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே. அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு ஈரான் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஈரான் இந்தத் தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த மோதல்களில் இதுவரை 12 சிறுவர்கள் உட்பட சுமார் 2,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சுமார் 18,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், தனது குடிமக்கள் இராணுவ நிலைகளுக்கு அருகே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |