அமெரிக்கா - ஈரான் இடையே ஆழமான விரிசல் : சமரசத்தை உறுதிசெய்ய கூடுதல் நாடுகள் அவசியம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இருதரப்பிற்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை, ஒப்பந்தங்களை எட்டுவதற்குப் பெரும் தடையாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தோஹாவின் மோதல் மற்றும் மனிதாபிமான ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுல்தான் அல்-குலைபி கூறுகையில், "அமெரிக்காவின் சலுகைகளை ஈரானும், ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்காவும் நம்பத் தயாராக இல்லை.
இரு தரப்பிற்கும் இடையே வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது," என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி கொள்கை தொடர்பாக
தற்போதைய சூழலில் பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் சமரச முயற்சிகளில், கூடுதல் நாடுகளை இணைப்பது தீர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

குறிப்பாக, ஈரானின் அணுசக்தி கொள்கை தொடர்பாக அமெரிக்காவிற்குப் பிற நாடுகள் உத்தரவாதம் அளிக்க முன்வர வேண்டும்.
அப்போதுதான், ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகு எவரேனும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள் என்ற உறுதி பிறக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி
இரு நாடுகளும் தங்களின் அதிகபட்ச கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கின்றனவே தவிர, மறுதரப்பின் கவலைகளைக் கருத்தில் கொள்வதில்லை என அல்-குலைபி சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் இடைவிடாத முயற்சிகளால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், பேச்சுவார்த்தை வெற்றிபெற பிராந்திய நாடுகளின் கூடுதல் ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே தங்களின் பிடிவாதத்தைக் தளர்த்தாத வரை, போர் நிறுத்தம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்பதே தற்போதைய களநிலவரமாக உள்ளது.