கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்! பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு
கொழும்பு நகருக்குள் விசேட போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொசன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "தேசிய சாரணர் பொசோன் வலயம்" திட்டத்தின் காரணமாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, ஜூன் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் மாலை 06.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மாற்று வழிகள்
லேக்ஹவுஸ் சுற்றுவட்டாரத்தில் இருந்து (ரீகல் சந்தி) பொலிஸ் தலைமையக சுற்றுவட்டாரம் வரையிலான சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் (சுமார் 500 மீற்றர் தூரம்) இந்த பொசோன் வலயம் நடத்தப்படவுள்ளது.

இந்தநிலையில், ரீகல் சந்தி பக்கமிருந்து வரும் வாகனங்கள் டி. ஆர். விஜேவர்தன மாவத்தை ஊடாக காமினி சுற்றுவட்டாரம் நோக்கியும், செரமிக் சந்தி - லோட்டஸ் வீதி ஊடாக என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் நோக்கியும் செல்லலாம்.
ஜஸ்டிஸ் அக்பார் மாவத்தை பக்கமிருந்து வரும் வாகனங்கள் மெலே வீதி மேம்பாலம் மற்றும் அலியா நானா சுற்றுவட்டாரம் ஊடாக சாரணர் மாவத்தை நோக்கி செல்லலாம்.
ஒத்துழைப்பு
சாரணர் மாவத்தை கொம்பனித்தெரு மேம்பாலத்திற்கு அருகில் இருந்து வரும் வாகனங்கள் என்.எஸ்.ஏ. சுற்றுவட்டாரம் மற்றும் அலியா நானா சுற்றுவட்டாரம் நோக்கி செல்லலாம்.

இந்த நாட்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, மேற்படி மாற்று வழிகள் மற்றும் வாகன நிறுத்தங்களைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை