சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
ஈரானிடமிருந்து பல மில்லியன் டொலர் மதிப்பிலான மசகு எண்ணெயை வாங்கியதற்காக, சீனாவின் இரண்டாவது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான 'ஹெங்லி பெட்ரோகெமிக்கல்' (Hengli Petrochemical) மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஈரானிய இராணுவத்திற்கு வருவாயை ஈட்டித் தரும் வகையில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததாக அமெரிக்க நிதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், ஈரானின் "நிழல் கப்பற்படை" என்று அழைக்கப்படும் சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீதும் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத் தடை
ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ள நிலையில், ஈரானின் வருமானத்தை முடக்குவதற்கான டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இந்தத் தடை குறித்து சீனா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வர்த்தக மற்றும் அறிவியல் தொழில்நுட்ப விவகாரங்களை அமெரிக்கா அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் சிறிய மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள், தள்ளுபடி விலையில் ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நிதி நெருக்கடி
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவும் எந்தவொரு இடைத்தரகர் அல்லது கப்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர்ச் சூழலால் ஏற்கனவே உலகளாவிய எரிபொருள் சந்தையில் விலை உயர்வு மற்றும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இத்தகைய பொருளாதாரத் தடைகள் சீனாவின் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை சீனா கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த ஆண்டும் சீனாவின் பல தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இதேபோன்ற தடைகளை விதித்திருந்தது.