இலங்கைக்கான பயண ஆலோசனை அறிக்கையை புதுப்பித்துள்ள அமெரிக்கா
இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என தனது நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கி, அமெரிக்கா, இலங்கை சம்பந்தமாக வெளியிட்டிருந்த பயண ஆலோசனையை நேற்று புதுப்பித்துள்ளது.
மூன்றாவது மட்டத்தில் இருந்த பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளதன் மூலம் அதனை இரண்டாம் மட்டத்திற்கு குறைத்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் காணப்பட்ட வரிசைகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவு, மருந்து உட்பட இறக்குமதி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டிருந்தன.
எனினும் கியூ.ஆர் முறை மூலம் அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் பயண ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பல சுற்றுலா விடுதிகளில் மின் உற்பத்தி இயந்திரங்கள் இருக்கின்றன
விநியோகத்திற்கு தடையேற்பட்டுள்ளதன் கரணமாக உணவு மற்றும் மருந்துக்கு குறிப்பாக தூர இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும் பல ஹோட்டல்கள், உணவகங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு விநியோகங்கள் கிடைத்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குறுகிய நேரத்திற்கு மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும் பல சுற்றுலா விடுதிகளில் மின் உற்பத்தி இயந்திரங்கள் இருப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.