பொதுபல சேனா, இனவாத அடிப்படையில் செயற்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அறிக்கை
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் தொடர்ந்தும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை சிறுபான்மை மதங்கள் மீது திணிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்க பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் மத ரீதியான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களை மேற்கோள்காட்டி அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.