இலங்கை அரசாங்கம்- ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு இடையிலான வழக்கு: தீர்ப்பை தாமதப்படுத்த கோரிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான வழக்கில், தாம் தலையிடலாம் என்ற அடிப்படையில், தீர்ப்பை தாமதப்படுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கம், திருப்பிச் செலுத்தாத 250 மில்லியன் டொலர் கடன் பத்திரங்களை மீட்பதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி, இலங்கைக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்தநிலையில்'அமெரிக்க அரசாங்கத்தின் சாத்தியமான பங்கேற்பு பற்றி, வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி டெனிஸ் கோட்டிற்கு, நியூயார்க் தெற்கு மாவட்டத்தின் சட்டமா அதிபர் டேமியன் வில்லியம்ஸ், கடந்த (30.08.2023) ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள்
முன்னதாக இறையாண்மை மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன், இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வரை, தீர்ப்பை ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு இலங்கையும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை திவாலாகிவிட்டதாக அறிவித்த நிலையில், தமக்கான 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறியமைக்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கை தாக்கல் செய்தது.
இதேவேளை வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இலங்கையின் நிதி அமைச்சகம் இதுவரை அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |