வெனிசுலா எரிசக்தி துறையை கட்டுப்படுத்தும் அமெரிக்கா: முதலீட்டாளர்களுக்கு தடை விதித்த ட்ரம்ப்
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கடந்த ஜனவரி மாதம் சிறைபிடித்ததைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய எண்ணெய் கையிருப்பைக் கொண்ட அந்நாட்டின் எரிசக்தித் துறையை முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான முதற்கட்டமாக, அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலர் கிறிஸ் ரைட் வெனிசுலாவிற்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு, அந்நாட்டின் எண்ணெய் கிணறுகளை ஆய்வு செய்ததோடு இடைக்கால ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எரிசக்தித் துறையை கட்டுபடுத்தும் அமெரிக்கா
வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் சமீபத்தில் கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூலம், கடந்த 20 ஆண்டுகளாக அரசு கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் துறையை இப்போது தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குத் திறந்துவிட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதில் பெரும் சவால்கள் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வெனிசுலாவின் அரசு நிறுவனமான PDVSA பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி சிதைந்து போயுள்ளதால், அதன் உள்கட்டமைப்பைச் சீரமைக்க சுமார் 100 பில்லியன் டொலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலீட்டு நிறுவனங்களுக்கு ட்ரம்ப் விதித்துள்ள தடை
மேலும், 2007ஆம் ஆண்டில் அந்நாட்டில் இருந்த அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, எக்ஸான்மொபில் (ExxonMobil) போன்ற நிறுவனங்கள் வெனிசுலாவை தற்போது "முதலீடு செய்யத் தகுதியற்ற நாடு" (Uninvestable) என வெளிப்படையாக அறிவித்துள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் இந்த எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவில் பெற்றோல் விலையைக் குறைக்க விரும்புவதாகக் கூறினாலும், வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் செய்யக் கடினமானது என்பதும், அதற்கு அதிக செலவாகும் என்பதும் முதலீட்டாளர்களின் தயக்கத்திற்கு முக்கியக் காரணமாகும்.
இருந்தபோதும், முதலீடு செய்ய மறுக்கும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளமை, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தீவிரமான நிலைப்பாட்டை உணர்த்துகிறது.
கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.. Cineulagam