கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை:ரட்ணஜீவன் ஹூல் உயர் நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்ட போது கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ததை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சத்தியக் கடிதம் ஒன்றின் மூலம் உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான ஆவணங்களை சமர்பிக்கவில்லை
அன்றைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் செயற்பட்ட விதம் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த முடியாமல் போனது எனக் கூறி, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த போது ரட்ணஜீவன் ஹூல் இந்த சத்தியக் கடிதத்தை தாக்கல் செய்தார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டிருந்த கோட்டாபயவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கும்
எனினும் கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.
இது சம்பந்தமாக சரியான முறையில் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்சவின் வேட்பமனு நிராகரிக்கப்பட வாய்ப்பிருந்தது எனவும் ரட்ணஜீவன் ஹூல் தனது சத்தியக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பல தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த எந்த வேட்பாளரும் கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புகளை முன்வைக்கவில்லை.
(நாகானந்த கொடித்துவக்கு)