அணுசக்தி மாநாட்டில் ஈரான் பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை
வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமைக்கு ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பயணத் தடைகளிலிருந்து மொஹமட் எஸ்லாமிக்கு விலக்கு அளிக்குமாறு மாநாட்டை நடத்தும் ஆஸ்திரியா விடுத்த கோரிக்கையை, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைக்குழுவில் அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அரசியல் நோக்கம் கொண்டது என
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவினால் அவருக்கு வழங்கப்பட்ட விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும், சர்வதேச அமைப்பினைத் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இருப்பினும், ஈரானிய பிரதிநிதி மாநாட்டைத் தனது பிரச்சார மேடையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விலக்கு கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.