உக்ரைன் போர் குறித்து அமெரிக்க-ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.
இச்சந்திப்பின் போது, உக்ரைன் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதை அமைச்சர் லாவ்ரோவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பேச்சுவார்த்தை
ஆகஸ்ட் 2025-இல் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்வைத்த முன்மொழிவுகளுக்கு ரஷ்யா இன்னமும் கட்டுப்பட்டு இருப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளையில், உக்ரைனுக்கு மேலைநாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ரஷ்யாவிற்கு "மூலோபாயத் தோல்வியை" ஏற்படுத்த முனையும் ஐரோப்பிய நாடுகளின் கொள்கைகள் பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாகவும் லாவ்ரோவ் சாடினார்.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு நேர்மையாகவும் சுமுகமாகவும் அமைந்ததாகத் தெரிவித்தார்.
அர்த்தமற்ற இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாகக் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் கட்டமைப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தாலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அமைதித் தீர்வை எட்டுவதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளது என ரூபியோ சுட்டிக்காட்டினார்.

மற்றொருபுறம், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, முடங்கிக்கிடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் அமெரிக்க தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருடன் கலந்தாலோசனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளைப் பாதித்துள்ள நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் மீண்டும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.