இலங்கையில் நிலவும் வறட்சி உணவு பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்: ஜூலி சுங்
இலங்கை மீட்சிக்கான பாதையில் செல்லும் போது, சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான கேந்திர நிலையமாக இலங்கை தனது பங்கை புதுப்பித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை, அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படை, அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஜூலி என்ட் ரிக்லி குளோபல் ஃபியூச்சர்ஸ் ஆய்வகம், யுஎஸ் இந்தோ-பசுபிக் கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தை நடத்துகிறது.
இதில் பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க தூதுவர், உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவது வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி வலுவான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
உலகின் பெரிய மற்றும் சிறிய அனைத்து நாடுகளும், வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
இலங்கையில் நிலவும் வறட்சி உணவுப் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர், இந்த பொதுவான சவாலை எதிர்கொள்வதற்கான யோசனைகளை பகிர்ந்துகொள்வதற்கும் ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறிவதற்கும் அனைவரும் ஒன்றிணைவது கட்டாயமாகும் என்று குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 14 முதல் 17 வரை நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தோ-பசிபிக்
பிராந்தியத்தில் உள்ள மூத்த இராணுவ வீரர்கள் மற்றும் உயர்மட்ட சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.



