கோட்டாபயவுக்காக ஜெபம் செய்த அமெரிக்க தூதுவர்-வீரவங்ச வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த மிகப் பெரிய தவறு பற்றி முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தகவல் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சாங்கின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி செயற்பட்டதாகவும் ஜூலி மாத கணக்கில் கோட்டாபயவை தினமும் சந்தித்தாகவும் அவர் கூறியுள்ளார். ருவான்வெல்லையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டாபயவின் வீடு சுற்றிவளைப்பட்ட இரவு அவரது வீட்டுக்கு சென்ற தூதுவர்
இவற்றை எவரும் கூற மாட்டார்கள். கூறுவதற்கு பயம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீடு சுற்றிவளைக்கப்பட்ட நாளில் இரவு அந்த வீட்டுக்கு ஜூலி அம்மையார் வந்துள்ளார். உங்களுக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
நீங்கள் ஒரு பௌத்தர், நான் கத்தோலிக்கர். எனது நம்பிக்கையின் அடிப்படையில் ஜெபிக்க இடமளியுங்கள். அப்படி கூறி ஜூலி அம்மையார் தரையில் முழங்காலிட்டு சர்வ வல்லமையுள்ள இறைவனை நோக்கி ஜெபம் செய்து, கோட்டாபயவுக்கு உதவுங்கள் என் விண்ணப்பம் செய்து ஆமென் என்று கூறியுள்ளார்.
மறுநாள் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பாருங்கள் அமெரிக்க தூதுவர் நல்லவர். நேற்று வந்து எனக்காக ஜெபம் செய்தார், யார் இப்படி செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
இனிப்பை சரியாக வழங்கி சிரமப்படாது வெற்றி பெற்ற விளையாட்டு
இது இனிப்பை சரியாக வழங்கி, சிரமப்படாது வெற்றிபெற்ற விளையாட்டு. சிறிய இனிப்புகளை வழங்கி வெற்றி பெற்ற விளையாட்டு. இப்படியான விளையாட்டுக்களை விளையாட வேறு நாடுகளில் இதனைவிட வேறு பொருட்களை கொடுக்க நேரிடும்.
ஜூலி அம்மையாளரின் பயணம் அன்று முதல் ஆரம்பித்தது.மறுநாளும் போகிறார்.அதற்கு மாறுநாளும் போகிறார். ஏதோ ஒரு தீர்மானத்தை எடுத்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் இப்படி செய்ய போகிறீர்களாக என்று கேட்கிறார். கோட்டாபய ஆமாம் என்கிறார்.
அப்படி செய்ய வேண்டாம் அப்படி செய்தால், சர்வதேச நாணய நிதியத்துடனான நிகழ்ச்சிக்கு சிக்கலாகி போகும் என்று ஜூலி அம்மையார் கூறியுள்ளார். இதனால், கோட்டாபய ராஜபக்ச தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார்.
ஜனாதிபதியை கட்டுப்படுத்திய அமெரிக்க தூதுவர்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னர் நுழைவு வாயிலை மூடிக்கொண்டிருப்போரை விரட்ட போகிறீர்களா என்று கேட்கிறார். கோட்டாபய ஆமாம் என்கிறார். அப்படி செய்யாதீர்கள் நாணய நிதியத்தின் நிகழ்ச்சி குழம்பி போகும்.
அப்படியானால் பரவாயில்லை செய்யாமல் இருந்து விடுகிறேன் என்று கோட்டாபய கூறுகிறார். ஜூலி அம்மையார் இப்படி ஒரு புறம் நாட்டின் ஜனாதிபதி கட்டுப்படுத்தினார். மறுபுறம் போராட்டத்தை கட்டுப்படுத்தினார் என விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.