மனித புதைக்குழி: மட்டக்களப்பில் நீதிபதி அடங்கிய குழுவின் அவசர பரிசோதனை
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் இன்று (17.03.2026) களவிஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 09 ஆம் திகதி, குறித்த மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், பிரதேசம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக குழுவினர் பார்வையிட்டபோது குறித்த இடம் குற்றப்பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பட்டிகள் இடப்பட்டிருந்த நிலையில், அவை அகற்றப்பட்டிருந்தது கவனிக்கப்பட்டதால், நீதவான் அந்தப் பிரதேசத்தை நேரடியாக பரிசீலனை செய்யத் தீர்மானித்தார்.
மனிதப் புதைகுழி வழக்கு விவகாரம்
குறித்த பிரதேசத்தில் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டத்தரணி கூறியதாவது, கடந்த மார்ச் 09 ஆம் திகதி, மனிதப் புதைகுழி வழக்கு மேலதிக விசாரணைக்காக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, நீதிமன்ற கட்டளைகளின் அடிப்படையில் இன்று களவிஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் களவிஜயத்தின் போது, பாதுகாப்புப் பட்டிகள் அகற்றப்பட்டும், பௌதீக ரீதியில் சில மாற்றங்கள் இடம்பெற்றாலும், சந்தேகத்திற்கிடமான புதைகுழி அமைந்த இடத்தில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின்படி இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டனர்.

இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதைகுழி எதிர்வரும் 30 ஆம் திகதி அகழ்வாய்வுக்கு உட்படுத்த மன்று அறிவித்துள்ள நிலையில், இந்த விசேட கள விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ருசாத்