பொதுமக்களை வழிமறித்து கப்பம் கோரும் மர்ம கும்பல் - பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அவசர கோரிக்கை
மட்டக்களப்பு - புதூர் பகுதியில் இயங்கி வரும் 7 பேர் கொண்ட கஜன் மற்றும் குண்டன் தலைமையிலான கும்பல் ஒன்று, இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் , நேற்று(04.11.2026) மட்டக்களப்பு - பொய்ஸ் ஒப் மீடியாவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இளைஞரின் பெற்றோர்கள் கலந்துக் கொண்ட பொழுதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதலை நடத்திய கும்பல் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை நேரில் காண்பவர்கள், உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பெற்றோர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
இந்த சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 26ஆம் திகதி சேத்துக்குடா பிரதேசத்தில் இருந்து புத்தூருக்கு தனது மகன் சென்ற வேளையில், கஜன் மற்றும் குண்டன் தலைமையிலான கும்பல் மகனிடம் பணம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், மகனுக்கும் கும்பலுக்கும் வாக்குவாம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தாக்கப்பட்ட நிலையில், அவரின் இதயம் இருக்கும் பகுதியில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலை நடத்திய கும்பல் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களில் மூவரை பொலிஸார் கைது செய்து, அதில் ஒருவரை பொலிஸார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.
அதே போன்று, குழுவின் பிரதான சூத்திரதாரிகளான கஜன், குண்டன் உட்பட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் இந்த பிரதேச வீதியால் செல்பவர்களை வழிமறித்து கப்பம் கோருகிறார்கள், கொடுக்க மறுப்பவர்களை தாக்குவது போன்று அடாவடித்தனம் செய்து வருகிறார்கள், இந்த கும்பலை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
எனவே இவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும், இன்று எனது மகனுக்கு நடந்தது போன்று, நாளை உங்கள் குடும்பத்தில் நடந்தால் என்ன செய்வீர்களோ, அதே மாதிரி நினைத்து எங்களுக்கு உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்டோரின் பெற்றோர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை