டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை (Photos)
இலங்கையின் பல பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் அறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜுலை 18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன் இவ்வாண்டில் மொத்தமாக 901 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் எமது மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தரவுகள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயின் தாக்கத்தினை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன் வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் இடங்களை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுத்து எமது சுற்றுப்புற சூழலை சுகாதாரமுறையில் பேணுவது எமது கடமையாகும்.
பெறுமதியான மனித உயிரை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றாய் செயற்பட்டு எமது
நாட்டில் இருந்து டெங்குவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு வரும் திடசங்கற்பம்
பூண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்
டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலம் ஆரம்பமாக உள்ளதனால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரையின் கீழ் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் இணைந்து செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இச்செயற்றிட்டத்தில் கொள்கலன் சேகரிப்பு மற்றும் களபரிசோதனை நடவடிக்கைகள் காரைதீவு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்பு பரிசோதனை
இதன்போது எமது அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களதடுப்பு பிரிவினர்கள் இணைந்து வீடுகளில் டெங்கு பரிசோதனை மேற்கொண்ட போது அதிகமான இடங்களில் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு மேல் குடம், வாளி மற்றும் நீல நிற பரல்களில் நீரை சேமித்து வைக்க வேண்டாம், ஒவ்வொரு முறையும் நீர் சேமிக்கும் கொள்கலன்களை பூரணமாக கழுவி சுத்தம் செய்த பின்னரே மீண்டும் நீரை சேகரித்தல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் கிணறு, நீர் சேமிக்கும் கொள்கலன்கள், மலசலகூட வாளி, சுற்றுப் புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அவதானியுங்கள்.
மேலும் அநேக வீடுகளின் வீட்டின் உட்பகுதியில் குளிர்சாதன பெட்டியின் பிற்பக்க நீர் தேங்கும் பகுதிகள், சமயலறையின் சிங் (sink) இன் கீழ்பக்க பகுதிகள், கூரையிலிருந்து கசிந்து வரும் மழைநீரை சேகரிக்க வைக்கும் பாத்திரங்கள், குளியலறையில் நீர் சேகரித்துவைக்க பாவிக்கப்படும் வாளிகள், நீர் தேங்கிநிற்கும் பூச்சாடிகள் போன்றவற்றில் அதிகமான நுளம்பு குடம்பிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
கடுமையான சட்ட நடவடிக்கை
எனவே குறிப்பிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருக இடமளிக்காமல் சுத்தம் செய்து கொள்ளுமாறும் சுத்தம் செய்ய தவரும் பட்சத்தில் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மனவர்த்ததுடன் தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.