தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்
கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.
எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன அழிப்பு
அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணி அபகரிப்பு
இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |