குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநரை சவால் செய்யும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கிஷோர்
குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் ஆளுநர் தவறாக வழிநடத்தப்படுகின்றார் என பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளரும் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகரசபை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் பிரச்சினை
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் நேரடியாக அணுகக்கூடிய நிர்வாக அமைப்பாக உள்ளூராட்சி மன்றங்களே காணப்படுகின்றன என்றும், வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தமது பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

குடிபுகு சான்றிதழ் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்படும் எனவும், இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் புரிந்து கொள்ளாமல் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனவும் கிஷோர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் அவசியம் என ஆளுநர் கூறுகின்ற நிலையில், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய கட்டிட அனுமதிகளும் குடிபுகு சான்றிதழ்களும் உள்ளனவா என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் செயலகத்திற்கான கட்டிட அனுமதிகளையும் குடிபுகு சான்றிதழையும் வடமாகாண மக்களுக்கு பகிரங்கப்படுத்த தயாரா? என அவர் சவால் விடுத்தார்.
வடமாகாணம்
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட நீண்டகாலத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் உள்ளதா என கேள்வி எழுப்பிய கிஷோர், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடமாகாணத்தில் குடிபுகு சான்றிதழ் தொடர்பான நடைமுறை முக்கியத்துவம் பெற்றதாகத் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் கட்டப்பட்ட பல பாரிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியோ குடிபுகு சான்றிதழோ இல்லாத நிலையில், அவை கட்டப்பட்ட காலத்தில் இத்தகைய நடைமுறை நடைமுறையில் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பதவி பறிக்கப்பட்டமை தனிப்பட்ட விடயம் அல்ல என்றும், வடமாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் குரலையும் பாதுகாப்பதற்கான போராட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.
பதவிகள் வரலாம், போகலாம். ஆனால் மக்களோடும் இந்த மண்ணோடும் நாங்கள் தொடர்ந்து நிற்போம். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எனவும் கிஷோர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சாவகச்சேரி நகரசபை தொடர்பான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri