ஜனாதிபதி, மலையக தமிழ் மக்களை உதாசீனம் செய்கிறார் - திகாம்பரம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மலையக மக்களை தமிழ் மக்களை உதாசீனம் செய்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவது நல்ல விடயம் எனவும் அது காலத்தின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்
எனினும் ஜனாதிபதியை சந்திக்க போவதாக அவர்கள் கூறியதாகவும் தாம் ஜனாதிபதியை சந்திக்க விரும்பவில்லை என அவர்களிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஜனாதிபதி அநுரவை மூன்று தடவைகள் தாம் சந்தித்ததாகவும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை கொடுத்து வீடுகளை நிர்மானித்து தருமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும் மலையக தமிழ் மக்களுக்கு பணம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மலையக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவும் என அரசாங்கம் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நட்டஈடு வழங்குவதை ஒருபுறம் வைத்தாலும் குறைந்தபட்சம் காணிகளேனும் மலையக தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்கி இருக்கலாம் என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
காணி வழங்குவதில் தயக்கம்
எனினும் அரசாங்கம் காணிகளை வழங்குவதற்கும் தயக்கம் காட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.
வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மலையக மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு மனது இருக்க வேண்டும் எனவும் அவரை தொடர்ந்தும் சந்திப்பதில் எவ்வித பயணம் கிடையாது என தான் கருதுவதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஜனாதிபதியை மீண்டும் சந்திப்பதில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.