ரஷ்யாவிற்கு எதிராக போரில் இரகசியமாக சண்டையிடும் பிரித்தானிய படைகள்: வெளிவரும் திடுக்கிடும் தகவல்
அமெரிக்க உளவுத் துறையின் இரகசிய ஆவணங்கள் கசிவு மூலம், ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைனில் பிரித்தானிய சிறப்பு விமானப் படை செயல்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கடந்த வார இறுதியில் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து, அவை உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஷ்ய படைகளுக்கு எதிராக பிரித்தானிய சிறப்பு படை பிரிவு
இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து அடுத்தடுத்து திடுக்கிடும் விவரங்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான செய்தி மூலம் போருக்கு முன்னதாக ரஷ்யாவிற்கு சுமார் 40,000 ராக்கெட்டுகளை வழங்க எகிப்து இரகசியமாக திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இது மேற்கத்திய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது உக்ரைனில் போரில் ரஷ்ய படைகளுக்கு எதிராக பிரித்தானிய சிறப்பு படை பிரிவு நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக வெளிபாடுகள் தெரியவந்துள்ளது.
கசிந்த தகவல்களின் படி "US/NATO SOF in UKR" என்ற தலைப்பில் ஒரு பிரிவில், உக்ரைனில் இருக்கும் மேற்கத்திய சிறப்புப் படைகளின் எண்ணிக்கையை ஆவணங்கள் பட்டியலிடுகின்றன.
ஆவணங்கள் பெப்ரவரி மற்றும் மார்ச் 2023 திகதியிட்டதாகத் தெரிவிக்கப்டுகின்றது, கோப்புகளின்படி, உக்ரைனில் செயலில் உள்ள நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 97 சிறப்புப் படைகளில் 50 பேர் பிரித்தானியர்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் அப்போது மதிப்பிட்டனர்.
அதில் பெரும்பாலும் எலைட் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (எஸ்.ஏ.எஸ்) படைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை உக்ரைனில் இருந்த மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சிறப்புப் படை வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிரித்தானியராக இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியா அரசாங்கத்தின் விளக்கம்
ஆனால் எவ்வாறாயினும், உக்ரைனில் இந்த சிறப்புப் படைகள் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதை அந்த ஆவணம் குறிப்பிடவில்லை.
மார்ச் 23ம் திகதியிட்ட கசிந்த ஆவணம், பிரித்தானியாவை சேர்ந்த (50) மற்றும் அண்டை நாடுகளான நேட்டோ உறுப்பினர்களான லாட்வியா (17), பிரான்ஸ் (15), அமெரிக்கா (14), மற்றும் நெதர்லாந்து (1) ஆகியவை உக்ரைனில் உள்ள உயரடுக்கு படைகளின் மிகப்பெரிய குழுவைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
கசிந்த இந்த விவகாரம் குறித்து பிரித்தானியா அரசாங்கம் இன்னும் எந்த விளக்கமும் தராமல் மௌனம் காக்கின்றன.