மலையகப் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: வாகன சாரதிகள் கடும் அவதானம்
மலையகப் பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று(5.6.2026)மாலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவியதால் பல பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவலை, தியகல, வட்டவலை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, ரததல்ல, நானுஓயா மற்றும் நுவரெலியா பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல இடங்களில் பார்வைத்தூரம் மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், எதிரே வரும் வாகனங்களை அடையாளம் காண்பதும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது.
பனி மூட்டம்
குறிப்பாக வளைவுகள் நிறைந்த மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகனங்கள் பெரும் அவதானத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பனி மூட்டம் காரணமாக வீதிகள் ஈரப்பதமாக காணப்படுவதுடன், வாகனங்களின் முகப்பு விளக்குகளின் ஒளியும் மங்கலாகவே தென்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதனால் வாகன சாரதிகள் குறைந்த வேகத்தில் பயணிப்பதுடன், முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகளை பயன்படுத்தி பயணிக்குமாறும், முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளியை பேணுமாறும் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.