முல்லைத்தீவில் பாதசாரிகளுக்கு இடையூறாக அமையும் வீதியின் சீராக்காத பகுதி
முல்லைத்தீவில் பாதசாரிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக அமையும் வண்ணம் வீதியின் சீராக்கப்படாத பகுதி ஒன்று தொடர்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.
பிரதான வீதியில் பாதசாரிகள் கடவைக்கு அண்மையில் அதிகளவு நீர் தேங்கி இருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தேங்கிய நீர் பாதசாரிகள் கடவையை பயன்படுத்துவோர் மற்றும் வீதியின் ஓரமாக நடந்து செல்வோர் என பாதசாரிகளை அதிகளவில் பாதிக்கின்றதை அவதானிக்கலாம்.
பிரதான வீதிகளின் பராமரிப்பில் ஈடுபடும் வீதியபிவிருத்தி திணைக்கள பணியாளர்கள் ஏனைய இடங்களில் செப்பனிடலில் ஈடுபட்ட போதும் இந்த இடம் அவர்களால் கவனிக்கப்படாது விடப்பட்டுள்ளது கவலையளிக்கும் விடயமாகும்.
ஆலடிச் சந்தி
முல்லைத்தீவு தண்ணீரூற்றில் உள்ள ஆலடிச்சந்தியின் வளைவுப்பகுதியிலேயே இந்த அவதானிப்பை பெற முடிகின்றது.
முன்னர் அதிகளவில் ஆலமரங்களால் நிழல் பரப்பி இருந்த இந்த வீதியின் இப்பகுதியில் இருந்த ஆலமரங்கள் நாளடைவில் அழிக்கப்பட்ட போதும், இப்போதும் அவ்விடம் ஆலடிச்சந்தி என அழைக்கப்படுகின்றது.
பிரதான வீதியாக இது இருப்பதோடு பாடசாலைக்கான பாதசாரிகள் கடவை ஒன்றையும் கொண்டுள்ளது.
அத்தோடு பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தரித்து நிற்கும் இடமாகவும் நீர் தேங்கியுள்ள இந்த இடம் பயன்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
திருத்தம் வேண்டும்
2009ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தியின் போது காபைற் வீதியாக மாற்றம் பெற்ற இந்த வீதியில் தொடர்ச்சியான மீள் புனரமைப்புக்களை மேற்கொண்டு வருகின்ற போதும் இவ்வாறான இடங்கள் கவனமெடுக்கப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிகளவிலான பொதுமக்கள் பயன்பெறக் கூடிய இந்த இடத்தில் தேங்கி நிற்கும் நீர், வடிந்தோடி எந்நேரமும் வீதியின் இப்பகுதியை பயன்படுத்தக் கூடியதாக சீர் செய்யப்படுதல் வேண்டும் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |