ஒன்றுப்பட்ட இலங்கையை பாதுகாக்கவேண்டும்!
ஒன்றுப்பட்ட இலங்கையை பாதுகாக்கவேண்டும் என்ற பந்து தற்போது, சிங்களவர்களின் கைகளில் உள்ளது என்று இலங்கையின் இணையத்தளம் ஒன்று கருத்துரைத்துள்ளது.
35 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்ததையடுத்து, மீண்டும் அது இலங்கையின் அரசியலில் பளிச்சென்று மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் பேரில் பாரிய எதிர்ப்புகள் மற்றும் வன்முறைகள் காரணமாக தலைமறைவாகியிருந்த அதிகாரப்பகிர்வுக்கு எதிரான சக்திகள் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளன. மீண்டும் சிங்களவர்களை காப்பாற்ற சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக தங்களை முன்னிறுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றன.
13ஆவது திருத்தச் சட்டம்
நாடு பிளவுபடப் போகிறது என்று பழைய சுழலுடன் அதே பிரசார விளையாட்டு ஆடப்படுகிறது. தனித் தமிழ் நாடு கோரி போராடிய விடுதலைப் புலிகள், அந்தத் திருத்தத்தை தூக்கி எறிந்துவிட்டு, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆதரவுடன் இந்திய அமைதிப்படைக்கு எதிராக இரத்தக்களரிப் போரை நடத்தினர்.
இந்தநிலையில், விடுதலைப் புலிகளால் மிகவும் அவமதிக்கப்பட்ட மற்றும் ஆட்சேபனைக்கு உள்ளான 13ஆவது திருத்தம் எப்படி நாட்டை உடைக்க வழிவகுக்கும்? இந்த சர்ச்சைக்குரிய விடயத்தை தென்னிலங்கை ஆலோசித்தால், தேவையற்ற அச்சங்களைத் தவிர்க்க முடியும் என்று குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
தெற்கில் பலர் உண்மையை உணர முயற்சிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே ஈழத்தின் நோக்கத்தில் உறுதியாக இருந்தார். 13ஆவது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பில் 35 வருடங்களாக உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள், அரசியலமைப்புக்கு எதிரானது என்பது உண்மையாக இருக்குமானால், கடந்த 35 வருடங்களாக நாடு அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சி செய்து வருகின்றது என்றே ஊகிக்கமுடிகிறது.
அரசியல் தீர்வு
1970ஆம் ஆண்டு வரை எந்தத் தமிழ்த் தலைவரும் அரசியல் தீர்வுக்காக வெளிநாடுகளைத் தேடிச் செல்லவில்லை. அப்போதிருந்து, தமிழ் மிதவாதிகளின் குறைந்தபட்ச நியாயமான அரசியல் கோரிக்கைகளைக் கூட தெற்கு புறக்கணித்தமை காரணமாகவே தமிழர்கள் இந்தியாவை நோக்கி நகர வேண்டியிருந்து.
இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்களின் பேச்சுவார்த்தைகளுக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. கொழும்பு கதவை மூடியதன் காரணமாகவே, தமிழர்கள் மீண்டும் இந்தியாவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாதநிலை ஏற்பட்டது.
இந்தியா,13ஆவது திருத்தத்தை இலங்கை மீது திணித்தது என்ற தென்னிலங்கையின் கருத்து சவால் செய்யப்படவேண்டிய ஒன்றாகும். சிங்கள அரசியல் இலங்கைக்குள் தமிழர் தேசியப் பிரச்சினையைத் தீர்த்திருந்தால் இந்தியா அரசியல் தீர்வை வலியுறுத்தியிருக்காது.
நடைமுறைப்படுத்துவதில் தலையிடுமாறு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தன. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் கொழும்பு முன்னேற்றம் காட்டியிருந்தால் தமிழ் கட்சிகள் இந்தியப் பிரதமரின் தலையீட்டை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
இலங்கைத் தமிழர்கள்
இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் தலையீடு நடந்தது. இது தவிர, இலங்கையில் இந்தியாவின் தலையீடு புவிசார் அரசியல் தவிர்க்க முடியாதது. உடனடி அண்டை நாடாகவும், பிராந்திய சக்தியாகவும், நாடு எரியும் போது இந்தியா அமைதியாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டிலுள்ள 80 மில்லியன் தமிழர்களுடன் இலங்கைத் தமிழர்கள் கலாசார உறவுகளைக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் இலங்கை அரசியல் பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட வேண்டியிருந்தது.
இன்னொரு வகையில் பார்த்தால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கம் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டும். வடக்கில் வரலாற்று ரீதியாக வசித்த தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை கருத்திற்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அத்தகைய தீர்வு இன்னும் முழுமையடையவில்லை.
இந்தப் பின்னணியில், இருதரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. ஏனவேதான், தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவின் மத்தியஸ்த தலையீட்டை வலியுறுத்தியுள்ளன. திருத்தத்தின் அரசியல் முக்கியத்துவம் முன்பை விட அதிகமாக உருவாகியுள்ளது.
மனித உரிமைகள் பேரவை
இதுவரை இந்தியா மட்டுமே அதை வலியுறுத்தி வருகிறது. எவ்வாறாயினும், இந்த திருத்தம் தற்போது சர்வதேச பரிமாணத்தை பெற்றுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது உட்பட,13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என என்ற கோரிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பரிந்துரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்தைய நல்லிணக்கச் செயல்பாட்டில் இந்தத் திருத்தம் மையமாக மாறியுள்ளது. பந்து இப்போது சிங்களத்தின் பக்கத்தில் உள்ளது. ரணில்-மைத்திரி ஆட்சியின் போது புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என சம்பந்தன்-சுமந்திரன் இரட்டையர்கள் நம்பினர். கூட்டாட்சி அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான கடைசி நம்பிக்கை அதுவாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சம்பந்தன் புதுடில்லியை முற்றாகப் புறக்கணித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, 13ஆவது திருத்தம் தொடர்பில் நாம் பேச வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டார். இந்த அனுபவத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் திருத்தத்தைப் புறக்கணிப்பதில் இருந்து விலகிச் செல்ல முடிவெடுத்தன.
எனினும், புதிய அரசியலமைப்புக்கான முயற்சியில் ஈடுபடுவது வீண் என தமிழ் புத்திஜீவிகள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இதனை உணர சம்பந்தன் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
தென்னிலங்கை அரசியல் மையம்
கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன போன்றவர்கள் பிரச்சினைகளை அறிந்திருந்தும், புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதில் உள்ள சிக்கலான சவால்களை விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தன் ஆகியோருக்கு தெரியப்படுத்த முயற்சிக்காதது ஆச்சரியமானது என்று இலங்கையின் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், பழைய வரலாறுகளில் பாடம் கற்றுக்கொண்ட, ஜனாதிபதி விக்கிரமசிங்க திரும்பி வந்து அரசியல் யதார்த்தங்களை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
தமிழ் கட்சிகளும் அதே யதார்த்தத்திற்கு திரும்பியுள்ளன. எனினும் தென்னிலங்கை அரசியல் மையம், இதனை நடைமுறைப்படுத்த மறுத்தால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு? என்று செய்தி இணையத்தளம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை மூன்றாம் தரப்பு தலையீட்டினால் மட்டுமே இலங்கையில் காண முடியும் என ஒரு சிறிய தமிழ் தரப்பு வாதிடுகிறது. ஒற்றையாட்சி அடிப்படையிலான 13ஆவது திருத்தத்தை அவர்கள் முற்றாக நிராகரிக்கின்றனர்.
மாறாக சர்வதேசக் கண்காணிப்பில் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்கு பொதுவாக்கெடுப்பு அவசியம் என்று இவ்வாறானவர்கள் வாதிடுகின்றனர். எனினும், பெரும்பான்மையான தமிழர்கள் இலங்கையில் கண்ணியமான வாழ்க்கையை விரும்புகின்றனர். அதை மறுத்தால், சிறுபான்மையினர் தரப்பு வாதம் தர்க்கரீதியாக நியாயப்படுத்தப்படும்.
அதிருப்தி
அரசியல் சாசன ஏற்பாடுகளைக்கூட தமிழ் மக்களுக்கு வழங்க மறுப்பவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என்ற கேள்விக்கு வரலாறே பதிலளிக்கவேண்டியிருக்கும். இதேவேளை யுத்தம் முடிவடைந்த 13 வருடங்களில் அரசியல் ரீதியாக தமிழர்களின் அதிருப்தியை திருப்திப்படுத்த கொழும்பு முயற்சிக்கவில்லை.
எனவே தற்போது ஒன்றுபட்ட இலங்கை என்ற யோசனையை பாதுகாக்க பந்து இப்போது
சிங்களத்திடமே உள்ளது என்று இலங்கையின் செய்தி இணையத்தளம்
சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
