சஜித் தரப்பின் ஒத்திவைப்புப் பிரேரணை முன்வைப்பு தொடர்பில் அதிருப்தி
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி "நாட்டின் தற்போதைய நிலைமை" மீதான ஒத்திவைப்புப் பிரேரணையை விவாதத்திற்காக முன்வைக்கும் முயற்சியின் போது சங்கட நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையானது, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில் அமரசேனவினால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த போது, இந்துனில் அமரசேன சபையில் இல்லை என்பதை கண்டறிந்தார்.
ஒரு நிமிடம் அவகாசம்
அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நோக்கி, அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநாயகரிடம் ஒரு நிமிடம் அவகாசம் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஒத்திவைப்புப் பிரேரணை
எனினும், முதலில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது ஐக்கிய மக்கள் சக்தி என்பதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சபைக்கு வராததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்குமாறு பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்க பிரதி சபாநாயகர் தயாராகும் போது, இந்துனில் அமரசேன சபைக்குள் வருகை தந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அரசாங்க தரப்பில் இருந்து அவரை நோக்கி நகைச்சுவை வார்த்தைகளும் சிரிப்பொலிகளும் எழுந்தநிலையில், விவாதம் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |