ஐக்கிய தேசியக் கட்சியே எமது தாய் வீடு - தெரிவித்த எம்.பி. மரிக்கார்
"ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படும். நாட்டை வங்குரோத்தடையச் செய்த தரப்பினருடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப்போவதில்லை." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தின் மூலம் விளக்கினார்.
"நானும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக வைத்துக்கொள்வோம். தந்தை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்கின்றோம். பின்னர் தந்தை நோய்வாய்ப்படும்போது, அவரைப் பார்ப்பதற்காக எமது தாய் வீட்டுக்கு வருகின்றோம்.
தாய் வீடு..
அங்கே எம்மால் தங்கியிருக்க முடியும் அல்லவா?" என்று கேள்வி எழுப்பிய அவர், இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களின் ஆரம்ப 'தாய் வீடு' என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்கிய இவ்வாறான தரப்பினருடன் எம்மால் எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று தெரிவித்த அவர், தமது அரசியல் கொள்கையுடன் ஒத்துப்போகும் தரப்புகளுடன் மாத்திரமே எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் விளக்கமளித்தார்.