நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கவுள்ள முக்கிய செய்தி
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
சீன விஜயத்தின் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மக்கள் மத்தியில் உரையாற்றி நாட்டுக்கு முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாநாடானது இன்று (21.10.2023) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் அரசியலமைப்பு
இந்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுமெனவும், நாடு வங்குரோத்து நிலை ஏற்பட்டதன் பின்னர், நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு வருவதற்கு முழு உலக நாடுகளின் ஆதரவையும் ஜனாதிபதி பெற்றுக்கொள்வார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து இலங்கையை ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி வழி காட்டியுள்ளார் என்றும், தேசிய மற்றும் பொருளாதார சுதந்திரத்தை வெல்வதற்கு முழு நாட்டையும் ஆதரிக்கும் வகையில் கட்சி அரசியலமைப்பை அவர் அறிமுகப்படுத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தொழில் வல்லுநர்கள், வெகுஜன அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், கட்சியின் அரசியலமைப்பை அங்கீகரிக்கக் கூடியவர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.