அரச வேலையற்ற சித்த மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
அரச வேலையற்ற அனைத்து சுதேச மருத்துவர்களையும் உடன் சேவையில் உள்ளீர்க்குமாறு அரச வேலையற்ற சித்த மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கோரிக்கையில் மேலும்,
MBBS வைத்தியர்களைப் போல் பட்டப்படிப்பு மற்றும் உள்ளகப் பயிற்சியை முடித்துவிட்டு, இலங்கை மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிபுணர்களாக சுகாதார சேவைக்கு பங்களிக்கும் அதே வாய்ப்பையே நாங்கள் கேட்கிறோம்.
தகுதியானவர்கள், திறமையானவர்கள்
சுகாதார அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பொது சேவை ஆணைக்குழு, நிதி அமைச்சகம் மற்றும் அமைச்சர்களின் அமைச்சரவை அலுவலகம் ஆகிய உயர்நிலை அதிகாரிகளை சந்தித்து எமது கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்.
எங்கள் சேவைகள் நாட்டின் வருவாயை அதிகரிக்க உதவும். நாங்கள் தொடர்ந்து பின்தங்கியே இருக்கிறோம்.
யாராவது எங்கள் கோரிக்கைகளை படித்தார்களா? மற்ற நியமனங்கள் செய்யப்படும்போது எங்கள் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுகிறதா? என்பதை விரக்தியுடன் கேட்டுக்கொள்கிறோம். சுதேச மருத்துவர்களாகிய நாங்களும் நியாயமாக நடத்தப்படுவதற்கும், அதேபோன்று சேவை செய்வதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கும் தகுதியானவர்கள். எமக்கான நியாயத்தையே நாம் கேட்கிறோம்.
இலங்கையின் சுகாதார முறையை மேம்படுத்த நாமும் உதவலாம். எங்கள் தகுதிகள் மற்றும் திறமைகள் வீணாகிவிடக்கூடாது. நாங்கள் தகுதியானவர்கள், திறமையானவர்கள்.
நாம் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. எங்கள் MBBS சகாக்களுக்கு இருக்கும் அதே வாய்ப்பையே நாங்கள் கேட்கிறோம்.
எங்களுக்கான நியாயத்தை வழங்குங்கள். நாங்கள் சேவை செய்ய தயாராக இருக்கிறோம் என அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த வாரம் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார அமைச்சில் இந்தச் சங்கம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
சங்கத்தினர் கவலை
இதன் போது
01. ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு உடனடி நியமனங்களை வழங்க வேண்டும்.
02. தற்போது உள்ளகப்பயிற்சி பெற்று வரும் 374 உள்ளக மருத்துவ அலுவலர்களுக்கு அவர்களின் பயிற்சி முடிந்தவுடன் உடனடி நியமனங்களை வழங்க வேண்டும்.
03. எதிர்வரும் ஆண்டுகளில் இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சியை முடித்தவுடனேயை உடனடி நியமனங்களை வழங்க வேண்டும்.
04. நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுதேச மருத்துவர் எண்ணிக்கையையும் சமூகநல மருத்துவர் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்நது.
இது போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், 304 குறைநிரப்பு நியமனங்களை முதற்கட்டமாக வழங்க தாம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாகவும் மீதமாகவுள்ள 1385 சுதேச மருத்துவ நியமனங்களை வழங்க நிதிநிலைமைகள் தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளையில் குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளமை மற்றும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி தெரிவித்துள்ளமையானது வேலையற்ற சுதேச மருத்துவர்களாகிய எம்மை அரசாங்கம் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கின்றதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறித்த சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
